Skip to main content

ஓவியம்...!

















வர்ணங்களின் ஆதிக்கத்தில்...
மறைந்தே போய்விட்டது ...
நான் வரைய நினைத்த ஓவியம்....
கூட்டத்தில் தொலைந்த....
குழந்தையைப் போல....
தேடித் தேடி...அலைந்து...
ஒராயிரம் திருத்தல்களுக்குப் பிறகும்
வர்ணங்களில் கரைந்தே,...
போய்விட்டது...அது!

வார்த்தைகளின் அலங்காரத்தில்...
எப்போதும் தொலைந்து போகிறது...
ஆழ்மனதின்....எண்ணங்கள்..
சக்கையாய் எழுத்துக்களை
துப்பிவிட்டு...சாற்றினை
ஊற்ற மறுக்கிறது மனது!
ஒரு சேவல் கூவிய விடியலில்
தொடங்கிய என் முயற்சிகள் ...
கிணற்று தவளையாய்....
பாதி ஏறி...மீண்டும்...
மீண்டும்...விழுகின்றன...
ஏறிய இடத்திலேயே.....!

எங்கிருந்தோ வந்த..
ஒரு தாலாட்டுச் சப்தம்...
என்னுள் இன்னும்...
உக்கிரமாய் நெருப்பேற்ற...
எண்ணியதைச் சொல்ல ...
முயன்று..முயன்று...மெதுவாய்..
ஜன்னல் திறக்கிறேன்...!

காத்திருந்த...காதலியாய்....
கட்டியணைக்கிறது...
நிலவின்...கிரகணங்கள்......
என் நிலை புரிந்தது போல...
மெல்ல சிரிக்கிறாள்... நிலா மகள்!
நடுநிசி நிசப்தத்தின் அடாவடியில்...
ஒரு ராட்சசனாய்..எழுந்து நின்று...
சமாதி நிலைக்குள்
எனைத்தள்ளி...
சப்தமாய் சிரிக்கிறது...
நான் பகிர நினைக்கும்...
மெளனம்!

கூர் மழுங்கிய ஆயுதம்தான் வார்த்தைகளும் இன்ன பிற விசயங்களும். எப்போதும் நாம் நினைப்பது ஒன்று வெளிப்படுத்துவது ஒன்று....மனிதர்கள் புரிந்து கொள்வது ஒன்று...!இப்படியாக வெளிப்பட்ட அல்லது வெளிப்படுத்த நினைக்கும் எல்லாமே...முழுதுமாய் வெளிப்படுவதே இல்லை.

ஓராயிரம் கருத்துக்களும் தத்துவங்களும், இருந்தாலும் ஒன்று கூட இதுவரை சொல்ல வந்ததை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்குமா? என்பது சந்தேகமே...புரிதல் என்பது முழுக்க முழுக்க பார்வையாளனின் மனோபாவம் பொறுத்த ஒரு விசயமே அன்றி வேறு ஒன்றுமே இல்லை. நமக்குள்ளேயே இருக்கிற அந்த புரிதலை வெளிக் கொணர நெம்பு கோலாய் வார்தைகள் சில நேரம் இருக்கும்...! ஏதோ ஒரு மனிதரோ, ஒரு பாடலோ, ஒரு இசையோ, ஒரு தத்துவமோ ஒரு கேள்வியோ, ஒரு நிகழ்வோ, ஒரு சூழலோ... நம்மைப் பிடித்துத் தர தரவென்று இழுத்துச் சென்று ஆழ்மனதில் போட்டு இதோ...பார்...இது தான் நீ என்று ஒரு வெறுமையைக் காண்பிக்கும்....!

அப்படிப்பட்ட ஒரு வெறுமையை ஓவியத்தில் சொல்ல நினைத்து, வார்த்தைகளுக்குள் முயன்று...போராடி போராடி கடைசில் தான் தோற்று...அவன் கண்ட வெறுமையே அவனை ஜெயித்து விடுகிறது...! அந்த ஜெயிப்பில் வென்றது வெறுமையாயினும்....அதன் ஜீவரசத்தை முழுதாய் அனுபவித்து தனக்குள்ளேயே...தேக்கி வைத்து....பிடிபட்ட உண்மையுடன் மெளனமாய் நகரப்போவது என்னவோ அவன் தான்....!

பசியாறி...பசிமாறி.... நிறைவாய்.... நிறைவுக்குள் போன பின்....சொல்லவும் கேட்கவும் ஆள் இல்லாத தருணங்களில் எதைச் சொல்ல...யாரிடம் சொல்ல....?

இனித்துக் கொண்டே இருக்கிறது...சுவைமாறா..ஒரு நெடும் இன்பம் நெஞ்சுக்குள்.....! நீங்களே உங்களுக்குள் தேடித் தேடி .... நீங்களே பருகுங்கள்..... நானும் எத்தனை முறைதான் தவறான ஓவியத்தையே உங்களுக்கு காண்பிப்பது....!


தேவா. S

Comments

நானும் எத்தனை முறைதான் தவறான ஓவியத்தையே உங்களுக்கு காண்பிப்பது....!//

ஓஹ எங்களுக்கு இதைனை நாள் காட்டியது தவறான ஓவியமா.....


ஒரு சேவல் கூவிய விடியலில்
தொடங்கிய என் முயற்சிகள் ...
கிணற்று தவளையாய்....
பாதி ஏறி...மீண்டும்...
மீண்டும்...விழுகின்றன...
ஏறிய இடத்திலேயே.....!//

மீண்டும் தொடருங்கள் விழுந்த இடத்தில் இருந்து......
vasu balaji said…
/இனித்துக் கொண்டே இருக்கிறது...சுவைமாறா..ஒரு நெடும் இன்பம் நெஞ்சுக்குள்.....! நீங்களே உங்களுக்குள் தேடித் தேடி .... நீங்களே பருகுங்கள்..... நானும் எத்தனை முறைதான் தவறான ஓவியத்தையே உங்களுக்கு காண்பிப்பது....!//

இந்த தேடல்தான் தவிப்பும் சுகமும் இல்லையா?:) நல்லாருக்கு
This comment has been removed by the author.
விஜய் said…
அண்ணா எங்கே பிடிக்கிறீங்க இந்த வார்த்தைகள் எல்லாத்தையும், அவ்வளவு எளிதாய் எங்கள் மனதில் நுழைய மறுக்கிறது, அந்த எழுத்துக்களை அறிய, அந்த எழுத்துக்கள் கூட தனக்கென ஒரு வாய்பாட்டை வைத்து இருக்கிறது தன்னை அறிய , உங்களை போலவே ..
நீங்கள் எழுதியவற்றை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஏதோ ஒன்றை புதிது புதியாய் கற்றுக்கொடுக்கிறது, மிக சிறந்த எழுத்துக்கள் இங்கே கோர்வையாய் மாட்டி தவிக்கின்றன, நிஜமாய் எங்களுக்கும் அவைகளை தாருங்கள் ...


அன்புடன் உங்க தம்பி
Unknown said…
வண்ணங்களை வார்த்தைகளில் வரைய முயன்றிருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்
மாம்சு கவிதை நல்லாருக்கு ஆனா பிரியலையே.... யாருக்குமே பிரியலையா இல்ல எனக்கு மட்டுந்தானா???
கடைசி வரைக்கும் இன்னா மேட்டருன்னே... என்ன மாதிரி கூமுட்டைக்கு விளங்கலை...
இதைநாம தனியா விவாதிப்போம்...:)) வர்ட்டா அங்....
Kousalya Raj said…
கவிஞர் விருது உங்களுக்கு கண்டிப்பாக ஏற்புடையதுதான். இன்னும் பல விருதுகளை உங்கள் கவிதை கொண்டு வரும். வாழ்த்துகள்.
ஹேமா said…
பதிவு முழுதுமே அழகு வார்த்தைகளோடு
மௌனம் வரைந்த ஓவியம்.
க ரா said…
அழகுன்னா.
Feros said…
நல்ல இருக்கு

வாழ்த்துக்கள் அண்ணா ...
SASIKUMAR said…
கூர் மழுங்கிய ஆயுதம்தான் வார்த்தைகளும் இன்ன பிற விசயங்களும். ஓராயிரம் கருத்துக்களும் தத்துவங்களும், இருந்தாலும் ஒன்று கூட இதுவரை சொல்ல வந்ததை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்குமா? என்பது சந்தேகமே...புரிதல் என்பது முழுக்க முழுக்க பார்வையாளனின் மனோபாவம் பொறுத்த ஒரு விசயமே அன்றி வேறு ஒன்றுமே இல்லை.
you are right dheva, i wanted highlight the sentence.but entire portion suppose to be highlighted great....shyssian
புரிதல் என்பது முழுக்க முழுக்க பார்வையாளனின் மனோபாவம் பொறுத்த ஒரு விசயமே அன்றி வேறு ஒன்றுமே இல்லை.//


ஆம்.. இது அவரவர் மனங்களைப் பொறுத்துப் புரிந்து கொள்ள வேண்டிய கவிதை தான். உங்களின் விடிகாலைத் தேடல் புரிந்தும் புரியாமலுமாகத் தான் இருக்கிறது. வார்த்தைகளின் வர்ணணைகளும், அதனைக் கோர்வைகளாக்கி முலாமிட்டுச் செதுக்கிய நுட்பமும் கை தேர்ந்த கவிஞனின் தரத்தினை உணர்த்தி நிற்கின்றது. உங்களின் இக் கவிதை மனம் எனும் சிற்பியால் செதுக்கப்பட்ட சொல்லோவியங்கள் என வர்ணித்து வார்த்தை வடிவம் கொடுத்தால் பொய்யாகி விடும். காரணம்? உண்மையின் உணர்விற்கல்லவா நீங்கள் கவிதை எனும் உருவம் கொடுத்துள்ளீர்கள். தொடர்க தோழா! ஒரு புதுமை நிறைந்த கவிதையாக இது புலப்படுகிறது. இன்னும் இன்னும் வேறுபாடுகள் நிறைந்த கோணத்தில் வண்ண வண்ணக் கவிதைகள் தருக.
ஓவியம்னா அது வண்ணங்களின் கலவைனு யார் சொன்னது? வார்த்தைகளாலும் நான் வரைவேனு சொல்லியடிச்சுருக்க நண்பா. உன்னால மட்டும் எப்படி இப்படி சிந்திக்க முடியுதுனு நெனக்கிறப்போ . . . . ச்சே . . . என்னால வார்த்தைகளை கூட சரியா எழுத முடியல . . .
மனசுல உள்ளத முழுமையா சொல்ல முடியலன்றத உங்களால மட்டும் எப்படி முழுமையா சொல்ல முடியுது?
////காத்திருந்த...காதலியாய்....
கட்டியணைக்கிறது...
நிலவின்...கிரகணங்கள்......
////////

கவிதையில் இங்கு வார்த்தைகளின் முரண்பாடா ! இல்லை உணர்வுகளின் வெளிப்பாடா ?!

பதிவு சிறப்பு . பகிர்வுக்கு நன்றி
நல்ல முன்னேற்றம் வரிகளில் தெரிகிறது..!!
Admin said…
//வார்த்தைகளின் அலங்காரத்தில்...
எப்போதும் தொலைந்து போகிறது...
ஆழ்மனதின்....எண்ணங்கள்..
சக்கையாய் எழுத்துக்களை
துப்பிவிட்டு...சாற்றினை
ஊற்ற மறுக்கிறது மனது!
ஒரு சேவல் கூவிய விடியலில்
தொடங்கிய என் முயற்சிகள் ...
கிணற்று தவளையாய்....
பாதி ஏறி...மீண்டும்...
மீண்டும்...விழுகின்றன...
ஏறிய இடத்திலேயே.....!//

என்னை அதிகம் கவர்ந்த வரிகள்.
ஒரு ராட்சசனாய்..எழுந்து நின்று...
சமாதி நிலைக்குள்
எனைத்தள்ளி...
சப்தமாய் சிரிக்கிறது...
நான் பகிர நினைக்கும்...
மெளனம்! //
நல்லா இருக்கு.

அழுத்தமாய், அழகாய் இருக்கிறது பதிவு முழுவதும்.
//ஏதோ ஒரு மனிதரோ, ஒரு பாடலோ, ஒரு இசையோ, ஒரு தத்துவமோ ஒரு கேள்வியோ, ஒரு நிகழ்வோ, ஒரு சூழலோ... நம்மைப் பிடித்துத் தர தரவென்று இழுத்துச் சென்று ஆழ்மனதில் போட்டு இதோ...பார்...இது தான் நீ என்று ஒரு வெறுமையைக் காண்பிக்கும்....!//

உண்மைங்க.. பலநேரம் இந்த சந்தர்ப்பங்கள் வாய்க்கப்பெற்றிருக்கிறேன்..

இதுபோன்ற அனுபவங்கள் மனதுக்குள் கொடுக்கும் வெறுமைகூட நமக்கான வாழ்க்கை பாடம்.. உணர்ந்தவர்கள் மகானாக...
Jey said…
///ஓராயிரம் கருத்துக்களும் தத்துவங்களும், இருந்தாலும் ஒன்று கூட இதுவரை சொல்ல வந்ததை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்குமா? என்பது சந்தேகமே...///
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், யாருக்கும், இது சாத்தியமில்ல என்பதே அன் கருத்து.

பதி நல்லாருக்கு தேவா.
எப்போதும் நாம் நினைப்பது ஒன்று வெளிப்படுத்துவது ஒன்று....மனிதர்கள் புரிந்து கொள்வது ஒன்று...!இப்படியாக வெளிப்பட்ட அல்லது வெளிப்படுத்த நினைக்கும் எல்லாமே...முழுதுமாய் வெளிப்படுவதே இல்லை.//

அருமை தேவா..
உங்க பதிவு என்றும் அருமை....
dheva said…
செளந்தர்....@ நன்றி தம்பி

பாமரன்....@ உண்மைதான் பாலண்ணே...தேடல்தாண்ணே சுகம்!

ரமேஷ் @ நன்றி தம்பி

விஜய்...@ ஹா..ஹா..ஹா.. நன்றி தம்பி!

நாஞ்சில் மாப்ஸ் @... யோவ்.. நேர வர்றய்ய மாப்ஸ் ..வந்து புரிய வைக்கிறேன்..! முதல்ல நீ காதல் கவுஜ எழுதுறத நிப்பாட்டு...!

கே.ஆர்.பி. செந்தில்..@ நன்றி பங்காளி

கெளசல்யா...@ மிக்க நன்றி தோழி

இராமசாமி கண்ணன்...@ நன்றி தம்பி

பெரோஷ்....@ நன்றி தம்பி

சசி...@ நன்றி சசி!

தமிழ் மதுரம்...@ புரிதலுக்கு நன்றி தோழர்

ஜெரால்ட் வில்சன்...@ நன்றி மாப்ஸ்

மாதங்கி//@ நன்றி தோழி

ஜெயந்தி...@ ஹா...ஹா..ஹா.. நன்றி தோழி

ஜெய்லானி..@ நன்றி... நண்பா!

சந்ரு..@ நன்ற தம்பி...!

விக்னேஷ்வரி...@ நன்றி தோழி!

பாலாசி...@ உண்மைதான் பாலாசி

ஜெய்....@ நன்றி தோழரே!

தென்னம்மை...@ நன்றி தோழி!

ஆர்.கே. குரு...@ நன்றி நண்பரே!


ஜீவன் பென்னி..@ நன்றி தம்பி!


அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்களை தெரிவித்து....மேலும் மேலும் உங்களின் பின்னூட்டங்கள் என்னை எழுதத் தூண்டும் உந்து சக்தியாய் இருந்து என் எழுத்துக்களுக்கு உரமாக இருக்கிறது...

மீண்டும் நன்றிகள் !
சிறப்பா இருக்குங்க....

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த