Skip to main content

வெளி...!

















தேடலின் உச்சத்தில்...
மரித்துப் போன எண்ணங்களால்...
திடமழிந்த உடலோடு..
கட்டற்ற திசையில்..
வெட்டவெளி வாசத்தில்....
நிகழும் என் பயணத்தின்
காலமெற்ற வெளியினில்.....
அது இது என்று...சுட்டியுணரப்படா...
பொருளற்ற பொருளாய்....
பரவிக் கிடந்த கிறக்கத்தை...
வாங்கிக் கொள்ள மனமின்றி.....
கிறக்கத்தில் ...கிறக்கமாகி..
எங்கும் விரவியிருந்த...
என்னின் விஸ்தாரிப்புகளில்
நடந்து கொண்டிருந்தது ஒரு ராஜ்யம்...!

எல்லாமான ஒரு இயக்கத்தில்
எதுவுமற்ற நகர்வுகளில்...
ஊடுருவிக் கிடந்த உணர்வற்ற.....
உணர்வுகளின் மிச்சத்தில்
மொய்த்துக் கிடந்த பிரியங்களில்
ஒளிந்து கிடந்தது....
உடலாய் நான் தேடி அலைந்த....
காதலின் படிமங்கள்....!

சட்டென எல்லாம் கலைத்து...
என்னை இழுத்துப் போட்ட...
பூமியில் அலறிக் கொண்டிருந்த...
அலாரம் அடைத்து...
குளியலறைக்குள் நுழைந்த...
காலையின்அவசரத்தில்...
ஆரம்பித்தது மற்றுமொரு...
நாளின் சராசரி பரபரப்பு.....!

விளக்கம் 1:

எண்ணங்கள் ஒழிந்து நான் என்ற அகங்காரம் ஒடுங்கிய பின்பு உடல் என்பது வெறும் வெற்றுச் சக்கைதான். எல்லாம் கழிந்த நிலையில் உடலென்று ஒன்று இருந்தாலும் ஒன்றுதான் இல்லை என்றாலும் ஒன்றுதான்.

உடலும் எண்ணமுமாகிய மனமும், அவை உதயமாகும் புத்தியும் இல்லாமல் போன பின்பு எஞ்சி இருப்பது ஒர் வித உணர்வு நிலையிலான ஆத்மா. அதன் இயக்கம் காற்றில் பரவும் சப்தம் போல மலரிலிருந்து பரவு மணம் போல, பாய்ந்து பரவும் ஒளி போல எதையெல்லாம் தொடுகிறதோ அதன் இயல்பை உணரும் ஒரு வித அடர்த்தியுடன் இன்னது என்று சுட்டிக் காட்டப்படாத எல்லாவற்றியின் இயல்பாயும் மாறிவிடுகிறது. அதாவது படியும் பொருளில் எல்லாம் அந்த பொருளாயே பரவும் ஒரு தன்மை கொண்ட நுண்ணிய உணர்வாய் ஒரு குளிர் போல ஊடுருவிச் செல்லும் அந்த ஆன்மா.....

எல்லாவற்றின் இயல்புகளையும் ஒருங்கே உணர்ந்து திளைத்து திளைத்து அதில் கிடைத்த சந்தோச கிறக்கத்தை உள் வாங்கி தேக்கி வைத்து உணர மனம் என்றொரு வஸ்து இல்லாமல் வெறும் கிறக்கத்தையே மீண்டும் பரவவிட்டு தன்னில் தானே அனுபவிப்பவன் இன்றி...அனுபமே எஞ்சியிருந்த ஒரு நிலையில் எல்லாமாய் தான் நின்று அங்கிங்கெனாதபடி அனாதியாய் பரவி எல்லா பொருளின் இயக்கத்தில் ததும்பி ஒட்டு மொத்தமாய் ஒரு ராஜங்கத்தை அரங்கேற்றி...இல்லாமல் இருந்து கொண்டிருந்தது.

எல்லாமாய் இருந்த அது அழுத்தமற்ற ஒரு நகர்வாய் மேகம் நகர்வது போல நகர்ந்து எல்லாவற்றிலும் படரந்து செல்லும் போது அந்த ஆத்மா உடலுக்குள் இருந்த போது கற்பனை செய்து வைத்திருந்த அல்லது மறைமுகமாய் உணர்ந்து வைத்திருந்த காதல் எல்லா உயிருக்கும் பொதுவாய், மனிதருக்குள்ளும், மிருங்கங்களுக்குள்ளும், தாவரங்களுக்குள்ளும் இன்ன பிற ஏனைய இயற்கையான எல்லாவற்றுக்குள்ளும் வண்டல் மண் ஆற்றுப் படுகையில் படிந்திருப்பது போல காதல் எல்லா இடத்திலும் மொய்த்துக்க்கொண்டிருந்ததை கண்டு உணரலோடு ஏற்று மறுதலித்தல் இல்லாமல் கடந்து கொண்டிருந்தது.

இப்படியாக உணர்வு நிலையில் எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்க...இதை உணர்வுப் பூர்வமாய் உணர்ந்த மானுடனின் நினைவுப்பகுதியில் லெளகீக வாழ்க்கையில் அவன் விடிதலுக்காக வைத்திருந்த அலாரம் அடிக்க சட்டென எல்லாம் கலைத்துப் போட்டு விட்டும் கலைந்து போன சீட்டுக்கட்டாய், உருகிப் போன பனியாய் திடப்பட்ட எண்ணங்கள் மீண்டும் உடலுக்குள் புகுந்து உடலின் பருமனையும் சராசரி வாழ்வின் நிகழ்வுகளையும் நினைவுப்படுத்த...உணர்வு நிலை மறைந்து...அடித்துக் கொண்டிருந்த அலாரம் நிறுத்தி....அன்றைய பரபரப்பு தினத்தின் தயாராதலுக்காக....குளியலறை புகுகிறான் இக்கவி நாயகன்.

அவனுக்குத் தெரியும் லெளகீக வாழ்க்கைக்கு இது எதுவும் உதவாது ஆனால்..உடல் அழியும் ஒரு தினத்தில் இவனின் புரிதல்களிலிருந்து துளிர்க்கும் ஒரு மெய்ஞானம்.



விளக்கம் 2:

நம்மாளு இன்ன பண்ணியிருக்கான்...ஒரு நா நைட் ஸ்லீப்ல டீரிம் அடிச்சு இருக்கான். ரொம்ப பேஜாரான ட்ரீம் அத்து...உடம்பே இல்லாம சும்மா காத்துலயே பறக்குற மாறி ஒரு ட்ரீம்....இன்னா..கேள்வி கேப்பாடு இல்லாம இஸ்டத்துக்கு எல்லா சைட்லயும் சும்மா சுத்தி சுத்தி வந்து ஒரே குஜாலா இருந்து இருக்கான்.......அப்போ ஒரு ஐடியா பண்ணி எல்லா உடம்புக்குள்ளேயும் பூந்து அல்லாரோட பீலிங்கும் எப்டி இருக்குன்னு பாப்பமேன்னு நினைச்சானம்....ட்ரீம் ரொம ஸ்ட்ராங்கா அடிச்சு அடிச்சு எல்லா பொருளுக்குள்ளேயும் பூந்து பூந்து ராஜா மாறி...எல்லா வெள்ளாட்டும் வெளையான்டானம்....

எல்லா உடம்புக்குள்ளேயும் பூந்து பூந்து பாத்தப்ப அவனுக்கு மெய்யாலுமே ஷாக்கா இருந்துச்சாம் ...இன்னான்னா...எல்லா உசுருக்குள்ளேயும், செடி கொடுக்குள்ளேயும், மிருவத்துக்குள்ளேயும் ஒரே லவ்ஸ்தானம்.. ஹ...க் ஹும்....எல்லாத்துக்குள்ளேயும் அன்பு இருந்துச்சாம் அதத்தான் நம்மாளு லவ்வுன்னு பிரிஞ்சுகிட்டானம். எல்லா வேல வெட்டியும் விட்டுட்டு இன்ன இது ட்ரீம்னு நீங்க கூவுறது நல்லா கேக்குதுப்ப...பட் இப்போ இன்ன பிராப்ளம்னா நம்மாளு கொஞ்சம் ட்ரீம் அடிக்கிறதுல்ல எஸ்பர்ட்டு அத்தான் சட்டைய களட்டி போட்றாப்ல உடம்ப தூக்கிப் போட்டுட்டு ஒரே ட்ரிம்ம்மு....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு அலாராம் கூவ சொல்ல கபால்னு எழுந்து டைம் பாத்தானம் மணி 7 தாண்டிடுச்சாம்...டகால்னு துண்ட எடுத்து தோள்ள போட்டுடு ட்ரிம தூக்கி கடாசிட்டு பாத்ரூம்குள்ளே பூந்துகிட்டானம் நம்மாளு.....

இன்னா படவா ட்ரீமு...கொய்யாலா வேலக்கி போனாதன் துட்டு..துட்டு இருந்தான் சோறு....! நாளைக்கு சாவுறப்ப பாத்துக்கலாம் நைனா எல்லாத்தையும்.....அதுக்குள்ள ட்ரிமு கீமுன்னு விழுந்திடாதிங்கப்பா.....பேமானி கண்ட கனவுன்னு வேண்ணா டைட்டில் வச்சுக்காலாம்...இன்னா தல நாஞ்சொல்றது....

பின் குறிப்பு:

a) கவிதையில் புரிந்தால் விளக்கம் அவசியம் இல்லை.

b) முதல் விளக்கம் புரிந்தால் இரண்டாவது விளக்கம் தேவையில்லை.

c) இரண்டாவது விளக்கமும் புரியாவிட்டால்....அதற்கு நான் பொறுப்பில்லை


தேவா. S

Comments

Unknown said…
நானே விளக்கம் கேட்கனும்னு நினைத்தேன். அதையும் கொடுத்தமைக்கு நன்றி
Unknown said…
கவிதை மட்டுமே போதுமே ....
என்ன அண்ணா இப்படி ஒரு விளக்கம் நாங்க விளக்கம் கேட்டால் இப்படியா இந்த கவிதைக்கு விளக்கம் தேவை இல்லை கட்டுரைக்கு தான் விளக்கம் தேவை
கவிதைல கடைசி பாரா மட்டும் விளக்கம் படிக்காமலே புரியுது...


விளக்கம் 1 - கொஞ்சம் புரிஞ்சாப்ல இருக்கு...

விளக்கம் - 2 - இன்னா டமில் இத்து.. ஒண்ணுமே புரியலியே..
பத்மா said…
எனக்கு ரெண்டாவது தான் புச்சுருக்கு நைனா
Mohamed Faaique said…
என்னா தல... விதவிதமா கலக்குரீங்க.......
க ரா said…
கவிதையே புரியுதுன்னா..
इथू तमिल्थाना?
இது தமிழ்தான?
பாஸ் இப்படி விளக்கம் கொடுத்துவிட்டால், என்னை மாதிரி தற்குறிகளுக்கு விளங்கும்
//உணர்வுகளின் மிச்சத்தில்
மொய்த்துக் கிடந்த பிரியங்களில்
ஒளிந்து கிடந்தது....
உடலாய் நான் தேடி அலைந்த....
காதலின் படிமங்கள்....!//

அருமையான வரிகள்
அண்ணா, படம் சூப்பர்.

Physics கூட ஏதோ புரிஞ்சி பாஸ் பண்ணிட்டேன். இதை மேல இருந்து கிழே, கிழே இருந்து மேல - எப்படி படிச்சும் புரிய மாடேங்குது. நான் விளக்கத்தை தான் சொன்னேன்.

அப்பாடி, விளக்கம் 2 புரிஞ்சிடுச்சியேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ... யுரேக்கா.........
vasu balaji said…
நல்லாருக்கு தேவா இந்த உத்தி. கருத்து அருமை.
கவிதை மட்டுமே போதுமே....
அருமையான விளக்கங்கள்...............

அண்ணா எனக்கு கவிதைய படிக்குறப்போ கொஞ்சம் புரிஞ்சது. விளக்கத்துல நல்லாவே புரிஞ்சுடுச்சு. உருவகம் என்ற வித்தையைத்தான் நானும் பயீல்வதற்கு முயல்கிறேன். விவரிக்கும் ஒன்றை அதாகவே மாறி உள் செல்லும் உங்களூக்கு.....சிம்ப்ளி சூப்பர்.
//பின் குறிப்பு:
a) கவிதையில் புரிந்தால் விளக்கம் அவசியம் இல்லை.
b) முதல் விளக்கம் புரிந்தால் இரண்டாவது விளக்கம் தேவையில்லை.
c) இரண்டாவது விளக்கமும் புரியாவிட்டால்....அதற்கு நான் பொறுப்பில்லை//


”கம்ப்யூடர்ஜி எனக்கு 50 50 வேனும் , சரியான பதில்ல விட்டுட்டு ஒன்னை கட் கரோ ..!! “


இப்ப இந்த கோன் பனேகா கங்கால் நிகழ்ச்சியில இருக்கிற ரெண்டு பதில்ல ஒன்னை செலக்ட பண்ண டெலிபோன் சர்வீஸ் வேனும்

”யார்கிட்ட பேசனும் மிஸ்டர் ஜெய்லானி ”

“ தேவான்னுட்டு ஒரு <... >ஜினியஸ் கிட்ட “

”யார் அவர் அவ்வளவு பெரிய ஆளா “

“ ஆமாம் அவர்தான் கவிதை எழுதிட்டு அதுக்கு ரெண்டு விளக்க கட்டுரையும் எழுதுவார் “

“ஓஹ் அப்ப சரிதான் கண்டிப்பா ஜீனியஸ்தான் “

“ஹலோ ..தேவாஜீ..நான்தான் ஜெய்லானி பேசறேன் “

என்னது ராங்காலா ...அவ்வ்வ்வ் படுபாவி பேரை கேட்டதும் எஸ்கேப்பா....அவ்வ்வ்வ்வ்
Chitra said…
பின் குறிப்பு:

a) கவிதையில் புரிந்தால் விளக்கம் அவசியம் இல்லை.

b) முதல் விளக்கம் புரிந்தால் இரண்டாவது விளக்கம் தேவையில்லை.

c) இரண்டாவது விளக்கமும் புரியாவிட்டால்....அதற்கு நான் பொறுப்பில்லை



....... நச்!
ஆரம்பித்தது மற்றுமொரு...
நாளின் சராசரி பரபரப்பு.....!///

ரியல் நேச்சர் சார்
Vijay said…
எப்படி அண்ணா இப்படி எல்லாம் யோசிக்ரீங்க...நிஜமா பிடிச்சு இருக்கு உங்க உக்தி....கருத்து போயி சேரனும் ஒவ்வொருத்தரையும் அவ்வளவு தான் , எப்படி சொன்னா நம்மா ஆளு ஏதுப்பான் அப்டின்னு நல்லா யோசிச்சு இருகீங்க போங்க ...
எனக்கு இரண்டாவது விளக்கம் நல்லா இருந்தது ..
அப்படியே எங்க தமிழையும்( கொங்குத்தமிழ் ) முயற்சி பண்ணுங்க ...
ஹி ஹி ..
ஆனா அண்ணா நீங்க சொன்னது உண்மைதான் ..உடல் அழியும் ஒரு தினத்தில் இவனின் புரிதல்களிலிருந்து துளிர்க்கும் ஒரு மெய்ஞானம்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த