Skip to main content

உடையாரின் அதிர்வலைகள்...16.11.2011!

















அதிர்வு I

அதிர்வு II

அதிர்வு III

மிகப்பெரிய ஒரு அனுபவத்துக்குள் லயித்துக் கிடக்கிறேன். இதை விட்டு வெளியே வந்து இந்த அனுபவத்தை எழுத்தாக்கவே எனக்கு தோன்றவில்லை. உடையாரை வாசிக்கத் துவங்கும் போது ஒரு அரசன் ஒரு கோவிலைக் கட்டினார். அதைப் பற்றிய ஒரு வரலாற்று கதை என்ற ஒரு எண்ணத்தோடு ஆன்மீக கருத்துக்களை நிறைய எதிர்பார்த்துதான் நான் உள் நுழைந்தேன்....ஆனால் ஒரு கால இயந்திரத்துக்குள் ஏறி பயணப்பட்டு அது பின்னோக்கி சென்று என்னை சோழ தேசத்துக்குள் கொண்டு சென்று இறக்கி விட்டு விடும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை...

எனக்குள் இப்போது பெருவுடையத்தேவரின் காலத்தில் நாம் வாழாமல் போய் விட்டோமே என்ற ஒரு ஏக்கம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இல்லை ஒரு வேளை வாழ்ந்திருப்பேனோ என்ற ஒரு எண்ணமும் உடன் கிளைக்கவும் செய்கிறது. இப்படியான எண்ணம் இந்தப் புதினத்தை வாசிக்கும் அத்தனை பேருக்கும் தோன்றத்தான் செய்யும் காரணம்....அது ஒரு ஏக்கம், ஆசை. எப்பேர்பட்ட ஒரு வீரன், எப்பேர்பட்ட ஒரு தலைவன், எப்பேர் பட்ட ஒரு அரசன், எப்பேர் பட்ட புருசன், எப்பேர் பட்ட ஒரு தகப்பன்...., எவ்வளவு சிறந்த சிவ பக்தன்......

மெய் சிலிர்த்துப் போகிறது. ஒரு கோயில் கட்டுவது என்பது செல்வத்தால் மட்டும் இயன்ற காரியமா? அல்லது வீரத்தால் இயன்ற காரியமா?இல்லை கூட்டம் இருந்தால் செய்து விட இயலுமா? முடியவே முடியாது....இப்பேர்பட்ட ஒரு மிகப்பெரிய வரலாற்று அதிசயமான கற்றளியை உருவாக்க தேவையாயிருந்தது மிகப்பெரிய ஒத்துழைப்பும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் இருந்த புரிதலும், ராஜராஜத் தேவர் மீது இருந்த தீராத பாசமும்தான்...

உத்தம சோழன் அரசாட்சி செய்து கொண்டிருந்த போது அவரது பிரம்மராயர்களாக பணியேற்று சேனாதிபதிகளாய் இருந்த இரவிதாசனும், பரமேஸ்வரனும், சேர்ந்து திட்டமிட்டு ஆயுதமின்றி நிராயுதபாணியாயிருந்த தனது தமையன் ஆதித்த கரிகாலனை கொன்றதை அறிந்து அதை உத்தம சோழனிடம் கூற உத்தம சோழன் குற்ற உணர்ச்சியால் அரச பதவியை விட்டு இறங்கிய உடன்......அரியணையில் ஏறிய சிங்கம்தான் உடையார் இராஜராஜத் தேவர்....

இரவிதாசனும், பரமேஸ்வரனும் அந்தணர்கள்....அவர்களைக் கொன்றால் அது தேவையில்லாத குழப்பத்தை சோழ தேசத்தில் ஏற்படுத்தும் என்று எண்ணி...அதைவிட கொடுமையான தண்டனையாய் ......வாளெடுத்து சீறி எழுந்த உடையார், வாள் முனையில் அவர்களும், அவர்களின் குடும்பம், பெண் எடுத்தவன் பெண் கொடுத்தவன் அத்தனை பேரையும் சோழ தேசத்தை விட்டு நாடு கடத்தும் போது தொடை தட்டிக் கொக்கரித்து நின்றிருக்கிறார்....! வஞ்சம் தீர்க்குமிடத்தில் ராஜராஜத் தேவருக்கு முன்னால் பாவ புண்ணியங்கள் என்று ஒன்றும் தோன்றியிருக்கவேயில்லை.

தன்னைச் சுற்றிலும் அந்தணர்கள், கருமார்கள், தேவரடியார்கள், வேளாளர்கள், சிற்பிகள், தச்சு வேலை செய்பவர்கள், தையல் வேலை செய்பவர்கள், தளபதிகள், சேனாதிபதிகள், புலவர்கள், அரசிகள், குருமார்கள், போர் வீரர்கள், மெய்காப்பாளர்கள், ஒற்றர்கள், என்று பலதரப்பட்ட மனிதர்களை கொண்டிருந்த உடையார், ஒவ்வொருவரையும் இணைக்கும் மிகப்பெரிய பாலமாக இருந்திருக்கிறார்.

ஒத்த கருத்தினை மேலே சொன்ன அத்தனை பேரும் கொண்டிருக்க இயலாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தினால், சூழலால் ஆன மக்கள். இவர்களை ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டுமெனில், எவ்வளவு பெரிய பராக்கிரமசாலியாய் அவர் இருந்திருக்க வேண்டும். காந்தளூர்ச் சாலையில் இருந்த கடிகை என்னும் போர்ப் பயிற்சிப் பள்ளியில் இராஜ இராஜரால் பழிவாங்கப்பட்ட இரவிதாசனும், பரமேஷ்வரனும் கூடி அவருக்கு எதிராய் படை திரட்டி பயிற்சி செய்து கொண்டிருந்தது கேள்வி பட்டு...

தனது முதற் போராய் சுமார் மூன்று லட்சம் வீரர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு சேர தேசத்தின் காடுகளுக்குள் நுழைந்து, எதிரிகளின் விஷ அம்புகளை எல்லாம் கடந்து தீப்பந்தங்கள் கொண்ட அம்புகளால் சேர தேசத்து மரக் கோட்டைகளை எரித்து நொறுக்கி, எதிரிகளைக் கொன்று, வாளேந்தி வந்த பெண்களையும் அழித்து, அவர்களை எல்லாம் தோற்கடித்து காந்தளூர்ச் சாலை கடிகையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதை நெறிப்படுத்தி முறையான போர்ப் பயிற்சி சாலையாய் ஆக்கியிருக்கிறார் உடையார்.

ஒரு சரித்திர நிகழ்வை வெறுமனே வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து விடலாம்....ஆனால் யோசித்துப் பாருங்கள்.....! ஒரு படையைக் கட்டுக் கோப்பாய் வழி நடத்திச் சென்று காடு மேடு மலைகள் எல்லாம் கடந்து போய் எதிரிகளை நாசம் செய்ய வேண்டுமெனில் எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டும். திட்ட வியூகங்கள் எவ்வளவு துல்லியமாய் இருந்திருக்க வேண்டும்.

போர்களை எல்லாம் கண்டு வெற்றி வாகை சூடி சோழ தேசத்தின் சக்கரவர்த்தியாய் அமர்ந்த பின் மனதில் ஏற்பட்ட ஒரு வெறுமையை, தன்னுள் இருந்த சிவபக்தியை, இந்த உலகம் கடந்து பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய விடயம் என்னவாயிருக்கும் என்று அய்யன் ராஜராஜத் தேவர் யோசித்திருக்க வேண்டும்..! பதட்டத்தோடு வாழ்க்கையை அவர் தொடங்கியிருக்கவில்லை. அரசராக ஆவதற்கு முன்னேயே அவர் மக்களோடு மக்களாக சுற்றியிருக்கிறார். மக்கள் பிரச்சினைகளை உளவியல் ரீதியாக அவர்களின் இன்னல்களை உணர்ந்திருக்கிறார்.

அப்படி இருந்ததால்தான்....தான் வீதியில் சென்று கொண்டிருந்த போது தன் மீது இருந்த அன்பால் தம்ம அழித்துக் கொண்டு நவ கண்டம் கொடுக்க இருந்த இளைஞனின் தோளில் கை போட்டு அவரால் பேச முடிந்தது. கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு மன்னரைப் போற்றியபடியே இறந்து உயிர் விடுவது சோழ தேசத்தின் சராசரி நிகழ்வு....! அது அவர்கள் மன்னர் மீது இருக்கும் பாசத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் செய்யவிருந்த செயல்...! உடையார் இப்படி நவகண்டம் கொடுக்க இருந்த ஒரு தனது தேசத்தின் மூன்றாம் தர குடிமகனை அழைத்து அறிவுரைகள் கூறி பொற்கழஞ்சுகள் கொடுத்து காந்தளூச் சாலை கடிகைக்கு போர்ப்பயிற்சி கற்க அனுப்புகிறார்.

அதாவது ஒரு கதை 6 பாகங்கள் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி நகர்கையில் அதன் வரிகளை என் விழிகள் தொட்டுத் தடவி மெல்ல மூளைக்கு அனுப்பும் ஒவ்வொரு நொடியும் நான் சம்பவம் நடக்கும் அந்த அந்த இடங்களில் ஓரமாய் நின்று கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

இது எப்படி சாத்தியம்...? இது எப்படி சாத்தியம் என்று ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து எழுத்துச் சித்தர் பாலகுமாரனை மனதுக்குள் வைத்துக் கொண்டாடிக் கொண்டே....அவருக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோம். இந்தப் பிறவியின் அற்புத அனுவத்துக்கு கூட்டிச் சென்ற பெரும் கொடுப்பினையை செய்தவராயிற்றே.....என்ற கவலையும் கொள்கிறேன்....

இராஜ இராஜத் தேவர் நடக்கிறார்...நானும் நடக்கிறேன்..! அவரின் தேர் நிற்கிறது நானும் நிற்கிறேன்...! இப்படி அமானுஷ்ட்யமான பல உணர்வுகளை எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் உடையாரில்....வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இன்னுமொரு நபர் அரசி பஞ்சவன் மாதேவி.

தேவரடியாராக இருந்து தன்னின் அற்புதமான நடன ஆற்றலாலும் அறிவாற்றலாலும் சக்கரவர்த்தியை கவர்ந்து அவரின் மனைவியானவர். பழுவூர் நக்கன் பஞ்சவன் மாதேவி. இராஜ இராஜத் தேவரின் முழு மூளையாகவே இருந்திருக்கிறார். மிகைப்பட்ட முடிவுகளை, நிர்வாக நுட்பங்களை எல்லாம் உடையாருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதிகாரமாய் அல்ல அறியாதவரைப் போல இருந்து....,

தேசத்தின் எல்லா பிரச்சினைகளையும் பஞ்சவன்மாதேவி அறிய அவருக்கென்று தனி ஒற்றர் படையும் இருந்திருக்கிறது. அரசரின் உடல் நலனிலிருந்து, அவரின் மனநலன் வரை பார்த்து பார்த்து கவனித்திருந்திருக்கிறார். ராஜ ராஜத் தேவருக்கு பின்னே நிழலாய் தொடர்ந்திருந்திருக்கும் அன்னை பஞ்சவன் மாதேவியை நினைக்கும் போதே கண்ணில் நீர் பெருகிவருகிறது.

இத்தனை காலம் கடந்து நாமெல்லாம் நவீன உலகத்தில் இருப்பதாய் கூறிக் கொள்கிறோம், ஆனால் சோழ தேசத்து அரசியலிலும் சாதாரண வாழ்வியலிலும் பெண்கள் எவ்வளவு பங்கு பெற்று இருந்தார்களோ அதில் கால் பங்கு கூட இப்போது கிடையாது என்றுதான் சொல்வேன். பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், பெண்ணடிமை தீரவேண்டும் என்றெல்லாம் பேசுகிறோம் நாம் இன்று...

ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் பெண்கள் போருக்கு செல்வதும், அரச சபையில் அமர்ந்து விவதம் செய்ததும், தத்தம் கணவர்கள் போருக்கு சென்ற பின் தேசத்தை காவல் காத்ததும்... நமக்கு தெரியவில்லை அல்லது தெரிந்து கொள்ள வில்லை.

திராவிட கலாச்சாரம் பெண்களை சரிசமமாய் நடத்துகிறோம் என்று சொல்லிக் கொள்ளாமலேயே சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளாமலேயே நடத்தியிருக்கிறது. இடையில் எங்கே இந்த பெண்ணடிமை முரண்பாடு எப்படி வந்தது என்றுதான் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது.

சக்கரவர்த்தி இராஜ இராஜ சோழன் தலைவன் என்றால்........இளவரசர் இராசேந்திர சோழன் புரட்சித் தலைவன் என்று எனக்கு சில நேரங்களில் தோன்றியிருக்கிறது. இடையிடையே இராசேந்திர சோழனுக்கு கைதட்டிய எனது கைகள் சிறிது நேரம் கழித்து இராஜ இராஜத் தேவருக்கு விசில் அடித்து கை தட்டி இருக்கிறது...

நிறைய பேசலாம்...பேசிக் கொண்டே இருக்கலாம்...இந்த அனுபவம் இந்த ஜென்மத்தில் எனக்கு தீர்ந்து போகாது. இவ்வளவு கனத்தை என் எழுத்துலக குருநாதர் எப்படி தன்னுள் இவ்வளவு நாள் ஏற்றி வைத்திருந்தார் மற்றும் அதை எப்படி இறக்கி வைத்தார் என்பதே எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது. எழுத்தின் மூலம் எனக்கு தீட்சை கொடுத்து இப்படியான அற்புதமான வரலாற்றோடு என்னைக் கரையச் செய்த பாலகுமாரன் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகளும் நமஸ்காரங்களும்..!

இன்னும் விரிவாக பேசலாம் அடுத்தடுத்த பாகங்களில்....

சோழம்...! சோழம்...! சோழம்....!

(இன்னும் அதிரும்....)


தேவா. S





Comments

படிக்கத் தூண்டும் பரவச எழுத்து...
உடையாரின் அதிர்வலைகள் படிக்கும் போது மனசுக்குள் அதிர்வைவிட வரலாறை அறிந்து கொண்ட ஆனந்தத்தை அளிக்கிறது.

சோழம்... சோழம்... சோழம்..

தொடருங்கள்... வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த