Skip to main content

பாரதி....!



















பாரதி திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை அதாவது இரண்டாவது தடவையாக இரண்டு நாளுக்கு முன்னால் பார்த்தேன். ஏற்கெனவே தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் உட்கார்ந்து ஒரு 20 பேர்ல ஒரு ஆளா பத்து பதினோறு வருசம் ஆகிடுச்சுன்னு வச்சுக்கோங்களேன்...! மறுபடி பாத்துட்டு ஒரு மனசு பூரா ஒரு வலியோட ரொம்ப நேரம் யோசிச்சுட்டு இருந்தேன்....

பாரதி புத்திசாலியா? இல்லை ஏமாளியான்னு ஒரு கேள்வி ஓடிகிட்டே இருந்துச்சு... அதே நேரத்துல பாரதி போன்றவர்களை லெளகீகக் கட்டுக்களை கடந்த ஜீவ புருசர்கள் தானேன்னும் தோணுச்சு.

பாரதி போன்றவர்கள், பிறக்கும் போதே கிளர்ந்தெழுந்த நிலையில் பிரபஞ்ச இருப்பின் மூலக்கூறுகளை அதிக விகிதாச்சாரத்தில் பெற்று மனித உடலுக்குள் அடைபட்டுப் போய் விடுகிறார்கள். மனோரீதியாக தனது பூர்வாங்க நிலையிலேயே லயித்துக் கிடக்கிறார்கள். லெளகீக சங்கடங்களை சரி செய்வது அவர்களுக்குப் பெரிய விடயம் இல்லை. கண நேரம் உற்றுப் பார்த்தால் அவர்களின் காலடியில் லெளகீகம் மண்டியிட்டுத்தான் கிடந்திருக்கும்....

ஆனால்....

ஒரு மகாகவியின் பார்வை தன் உடல் கடந்தது, தனது குடும்பம் கடந்தது, அவன் உலகத்தினை வார்த்தைகளால் சொடுக்குப் போட்டு திரும்பி பார்க்க வைத்து பிரபஞ்ச இயக்த்தின் பகுதியான பூமியில் தான் வாழும் சமூகத்தின் சங்கடங்களை துடைத்தெறிய வந்த சிற்பி. அவனை அம்மி கொத்த அழைப்பது போலத்தான் லெளகீக தேவைகள் எல்லாம் இருந்தன...., பாரதி செய்த ஒரு தவறாக நான் பார்ப்பது திருமண பந்தத்தில் ஈடுபட்டது மட்டும்தான் . அப்படியான ஒரு கட்டமைப்பில் அவனது பிறப்பு நிகழ்ந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை....,

திருமணம் என்ற ஒன்றின் மூலம் அவன் கொஞ்சம் தடுமாறித்தான் போனதாக நான் உணருகிறேன். பொருள் ஈட்டி தன் வீடு, தன் குடும்பம், தனது இருப்பு, தனது சேமிப்பு என்று ஒரு பாரதியால் சர்வநிச்சயமாய் இருக்க முடியாது. அவன் வானின் தெரியும் புள்ளினாமாய் எல்லாம் இருந்தான், காக்கை, குருவிகளை தனது ஜாதியென்றான், நீள் கடலும், வானும் அவனின் கூட்டமென்றான்....அவன் உடல் சார்ந்தே சிந்திக்கவில்லை.... ஆனால் துரதிருஷ்ட வசமாக உடலுக்குள் இருந்தான்....

இரு வேறுபட்ட நிலையில் தடுமாறிய பாரதியின் புத்தியில் கிளர்ந்தெழுந்த பிரபஞ்சத்தின் தீச்சுவாலை சமகாலத்தில் இருந்த முரண்பாட்டு முடிச்சுக்களை எண்ணி சீறித்தான் எழுந்தது. இந்திய சுதந்திரப் போராட்டம் அவன் காலத்தில் நடந்தது, அதில் இருந்த நியாயமின்மையும், மனிதர்கள் மனிதர்களை ஆக்கிரமித்து அடிமப்படுத்துதல் கூடாது என்று பாரதி சிலிர்த்தெழுந்தது சராசரி மனிதனாய் அல்ல...

அக்னி சொரூபமாய், பெரும்புயலாய், ஆழிப் பேரலையாய் அவன் வெகுண்டெழுந்தான். அவனுடைய காலத்தில் இருந்து போராடிய அத்தனை பேரும் மனிதர்களாய் இருந்து போராடினார்கள், பேசினார்கள், சண்டையிட்டார்கள்....பாரதி பிரபஞ்சப் பிளம்பாய் நின்று கொண்டிருந்தான். அதானால்தான் காந்தியடிகளின் சுதந்திரப் போரட்டத்துக்கு அவன் ஆதரவு தெரிவிக்காமல் ஆசிர்வாதத்தை தெரிவித்தான்....

அக்னி குஞ்சுகளாய் அவனது கவிதைகளை எழுதி, எழுதி அவற்றை எல்லாம் பதத்துப் போன மனித மூளைகளுக்குள் திணித்துப் போட்டுச் சென்றான். நெருப்பின் சீற்றமாய் அது பற்றி எரியத்தான் செய்தது. அவன் பிரம்ம சொரூபமாயிருந்தான், ஆனால் லெளகீகம் அவனை பட்டினி போட்டது, லெளகீகம் அவனை அவமானப்படுத்தியது, சித்தம் கலங்கி தன்னை தானே உடலுக்குள் அடைத்துக் கொண்டு சுயநல நாடகங்கள் நடத்தி எப்போது தன்னலம் விரும்பும் சுயநல மனிதர்களுக்கு நடுவே அவன் பித்தானாகித்தான் போனான்....! ஆமாம் பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதியை விளங்கிக் கொண்டவர்கள் வெகு சிலரே....

தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்காக மட்டுமே வாழ முடியாமல் பாரதி தடுமாறிக் கிடந்த இரவுகள் ஏராளம்....! அதனால்தான் அவன் லெளகீக போராட்டங்களை உடலால் நின்று முன்னெடுக்காமல் எல்லாம் வல்ல பராசக்தியிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தினான்...! உப்புக்கு புளிக்கும் என்னை அலைய வைக்கிறாயே.....என்று அந்த பெருஞ்சக்தியைச் சாடினான்.

இது என்னவோ வெற்றுப் புலம்பல் அல்ல....மேலோங்கிய நிலையில் இருந்த சக்தி சட்டென்று தான் இடம் மாறியது ஒரு மானுட உடல் அங்கே மயக்கத்தில் சிக்கிக் கொண்டு முழுமையாய் செயல்படுத்த முடியாமல் திணறியது. அதுதான் உண்மை.

அவனுக்கு பொருள் ஈட்டத் தெரியாமலில்லை, தெரியும். புலமை இல்லாமலில்லை, இருந்தது. ஆனால் அவனுக்கு இந்த வாழ்க்கையின் நெளிவு சுளிவுகள் எல்லாம் கால விரயமாய்ப் பட்டது. அவன் எங்கோ இருந்தான்...எதை எதையோ நிகழ்த்திக் காட்ட இயற்கையின் கூறுகளோடு கை கோர்த்துக் கொண்டு சீறிப் பாய முயன்று கொண்டிருந்தான் ஆனால் மிகையான குறைகள் அவனை இழுத்துப் பிடித்து கீழே இறக்கிக் கொண்டே இருந்தன.

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ என்று அவன் கேட்ட நல்லதோர் வீணை அவன் தான்....! சொல்லடி சிவசக்தி என்று அதட்டிக் கேட்டு பதில் பெற முயன்றான்....! வல்லமையை அவன் கேட்டது எல்லாம் அவனது குடும்ப நலனுக்காய் அல்ல....இந்த மாநிலம் பயனுறத்தான்.....என்று அவனது காலத்தில் இருந்தவர்களுக்குப் புரிபடவில்லை..

பாரதி எழுத்துக்களை வியாபரமாக்கியிருந்தால் அந்த வியாபரத்தோடும், பணத்தோடும் தன் குடும்பத்தாரோடு 80 வயதுகள் வரை வாழ்ந்து மரித்திருக்கக் கூடும் ஆனால்...சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பல விழிப்புணர்ச்சி விழுமியங்கள் இல்லாமல் மிகைப்பட்ட மானுடக்கூட்டம் விலங்குகளாய்த் தானிருந்திருக்கும் என்பதையும் அறிக. பாரதி ஒரு குடும்பத்துக்காய் பிறக்கவில்லை....இயற்கை அவனை இந்த சமூகத்துக்காய் இறக்கி வைத்தது அந்த திட்டதில் ஏற்பட்ட சிறு சறுக்கல்தான் அவனது இல்லறம்....

அவனின் கனவுகளும், சமுதாய விழிப்புணர்வு செய்திகளும் எவ்வளவு கம்பீரமானதோ அவ்வளவு கம்பீரமானது அவனது காதலும்....! கட்டுக்குள் நின்று உடலுக்குள் அடைப்பட்டிருக்கும் ஏதோ ஒரு மானுட பிண்டத்தை அவன் காதலித்து இருப்பானென்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. பாரதியின் கவிதைகளில் நிரம்பிக் கிடக்கும் காதல் செல்லம்மாவுக்காய் செய்ததாய்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.....

அவன் பிரபஞ்சக் காதலன். கண்ணம்மா என்ற பெயரில் அவன் பார்த்ததெல்லாம் பிரபஞ்ச அழகுகளையும் அறிவுகளையும் அற்புதங்களையும்......காதலென்ற வார்த்தை ஏதோ காமம் சம்பந்ப்பட்டது, உடல் அவயங்கள் சம்பந்ப்பட்டது, என்று உலகம் நினைத்துக் கிடந்த காலத்தில்

" காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம்; சிற்பம்முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே”

என்று உலகத்தீரை நோக்கி அறைகூவல் விடுக்கிறேன். மாசு மறுவற்ற காதல் என்னும் உணர்வு பரம திருப்தியானது. அது மூல உண்மைக்கு உங்களையும் என்னையும் கூட்டிச் செல்லும். அன்பு என்று வருமிடத்தில் கலப்படம் செய்யாதீர், லெளகீக நியதிகளைக் கட்டுக்குள் வைத்து காதலை தீர்மானிக்காதீர்கள்........காதலால் கவலைகள் தீரும்.....காதலால் நல்ல கானங்கள் உண்டாகும்....அத்தனை கலைகளும் உண்டாகும்.....என்று சொன்னதோடு அவன் நிற்கவில்லை....ஆகா...!!!அதுவன்றோ தலைமையின்பம் என்றான்.

இன்பத்தின் உச்சம் என்ன பணமா? உணவா? உடையா? வீடா? பொருளா? காமமா? வாகனமா அல்ல அல்ல அல்ல....காதலே தலைமையின்பம்....! தலைமையின்பத்தை துய்ப்பவனுக்கு மற்ற இன்பத்தை அனுபவிப்பவர்கள் எல்லாம் பிச்சைக்காரகள்தான். ஆமாம் பாரதி தன்னுள் லயித்துக் கிடந்த காதலில் திளைத்துக் கிடந்தான்...!

காதலின் உச்சத்தில்தான் வானகமே.....இளவெயிலே...மரச்செறிவே.....என்று கூவி கூவி பாடினான்...! இப்படி காதலோடு இருந்ததாலேயே அவனுக்கு நிலையாமை என்பது தெளிவாய் தெரிந்திருந்தது.. நீங்கள் எல்லாம் கானலின் நீரோ...? வெறும் காட்சிப் பிழைதானோ என்று இயற்கையின் வெளிப்பாடுகளை ஏளனம் செய்யவும் முடிந்தது!

பாரதி காதலின் உச்சத்தில் நின்று கொண்டு கடவுள் பட்டம் பெற்றவன்...!

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
திருமித் தழுவி ''என்ன செய்தி சொல்'' என்றேன்;
''நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்ற நலங்கள் என்ன? பேசுதி'' என்றாள். ...

''நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
பெற்றுதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்''.

சுற்றி அவன் கண்ட பொருட்களில் எல்லாம் காதல் இருந்தது. இயற்கையே அவன் காதலி...நிதர்சனமான வெளிப்பாடுகளில் அவன் கிறங்கிப் போய்க் கிடந்தான். பாரதிக்கு பெண்ணடிமையும் இன்ன பிற மனித ஆணவங்களும், சாதி என்னும் மாயைகளும் கண்டு எப்போதும் கடும் கோபம்தான்...

தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் உள்ளவர்கள் எல்லாம் எதையெல்லாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தார்களோ அவையெல்லாம் அவ்வப்போது நொறுக்கிப் போட்டு அவர்களை சிறுமைப்படுத்தவும் அவன் தயங்கவில்லை. 39 வயது என்பது மிக அதிகமாய்தான் போனது அவனுக்கு. இந்த பூமியில் நீண்ட நாள் வாழ வேண்டுமெனில் மதி மயங்கித்தான் வாழ வேண்டும்.

பொய்களைப் பிடித்துக் கொண்டு உண்மை உண்மை என்று கூவிக் கூவி நம்மையும் பிறரையும் ஏமாற்றி நகரவேண்டும்....! ஆனால் பாரதியை இயற்கை விரைவிலேயே அழைத்துக் கொண்டது....அவன் வாழச் சரியான சமூகம் இல்லை அல்லது அவனது மேலான அறிவின் நிலை இயற்கையை ஒத்தது. அது இயற்கையாகவே இருக்கட்டும் என்று எண்ணி இளமையிலேயே மீண்டும் தன் பூர்வ நிலைக்கு அவனை அது மீண்டும் அழைத்துக் கொண்டது....

அதனால்தான்....அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை..." என் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் " என்று காலனை மல்லுக்கு அழைத்தான்....! பாரதி வாழ்ந்த காலத்தில் வெளிப்படாமல் பதுங்கிக் கிடந்த புலியாய் அவனது கருத்துக்கள் கிடந்தன. இன்று யார் தடுத்தாலும் முடியாது....? யார் மறுத்தாலும் இயலாது....யார் வெறுத்தாலும் ஒழியாது பாரதியின் வார்த்தை வீச்சுக்கள்...

அவன் வாழ்ந்த நூற்றாண்டில் நாமும் வாழும் பேறு பெற்றோம். அவனது எழுத்துக்களை வாசித்து உணரும் அறிவு பெற்றோம் என்ற மட்டிலேயே பெரும் திருப்தி நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கிறது. பிரபஞ்சக் கவி அவன்...! மனிதர்களாக வாழ்ந்து வெறுமனே சுக துக்கங்களை பங்கு போட்டு வாழ்ந்தவர்களை ஒரு கட்டத்தில் காலம் அழித்தொழித்து விடும்....

ஆனால் பாரதி இயற்கையைக் கடந்தவன்.....! புவியென்ற ஒன்று உள்ளவரைக்கும், தாய்த் தமிழ் உள்ள வரைக்கும்...இந்த ஜன சமுத்திரம் பாரதியை தவிர்க்க முடியாது....! அவன் பெருஞ்சக்தியாய் இன்னும் வரப்போகும் தலைமுறைகளின் புத்திகளுக்குள் எல்லாம் புகுந்து புரட்சி விதைகளை தூவிக் கொண்டுதான் இருப்பான்.....!

வாழ்க பாரதி ...! வாழ்க நீ எம்மான்....!

தேவா. S

பின் குறிப்பு: அன்பின் மிகுதியால் மிகைப்பட்ட இடங்களில் ஒருமையில் அழைக்க வேண்டியதாயிற்று பொறுத்தருள்க:


Comments

Hats off Deva Sir...

பாரதி என்றொரு அவதாரம் இல்லையென்ற நிலையில் நவீனத்தமிழை யோசித்துப்பாருங்கள்... அவன் அருமையும் அவசியமும் விளங்கும்...
Mahi_Granny said…
ஆஹா . தேவா பாராட்டுக்கள் . திரைப்படத்தின் தாக்கம் இத்தனை அழகாக வெளிப்பட்டது குறித்து மகிழ்ச்சி .
HiCRT said…
Bharathi... Neruppai.... Tamilinanin manathil vithathavan... katturai arumai.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல