Skip to main content

யாளி ஒரு கற்பனை மிருகமா...?!

Yali @ my Office
தஞ்சாவூர் கோயிலில் கோபுரத்தில் யாளிகளுக்கு என்று தனி வரிசை இருக்கிறது. யாளிகள் இல்லாமல் எந்த ஒரு கோயிலையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்த அளவு யாளிச் சிற்பங்கள் பெரும்பான்மயான கோயில்களில் இருக்கின்றன. கோயிலின் கலையம்சத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்ட இந்த யாளிகளை செதுக்கி கூட இருக்கலாம். யாளியில் என்ன கலையம்சம் என்று யோசிக்கிறீர்களா? அதுவிமில்லாமல் சாத்வீகமாய் சமாதானமாய் மன அமைதிக்காக வரும் கோயிலில் ஏன் சீற்றத்தோடு பயங்கரமான அப்படி ஒரு பிரம்மாண்ட மிருகம் என்ற கேள்வியும் நமக்குள் எழத்தான் செய்கிறது.

யாளி பிரம்மாண்டமானது என்று எப்படி சொல்கிறாய் என்றுதானே கேட்கிறீர்கள். பெரும்பாலும் யாளிகள் யானையின் துதிக்கையைப் பிடித்து கோபத்தோடு தூக்குவது போன்ற சிற்பங்களை கவனித்து யானையின் வடிவோடு ஒப்பிட்டு யாளியை பெரிதுபடுத்திப் பார்த்த போது இந்தப் பிரம்மாண்டம் எனக்குள் தோன்றியது. சிங்கமுக யாளி, மகர யாளி, யானை யாளி இந்த மூன்று வகையில்தான் யாளிகள்  பெரும்பாலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. மூன்று வகையாய் இருந்தாலும் இந்த யாளிகளை உருவாக்க அடைப்படையாய் அவர்களுக்குள் இருந்த கற்பனை சிங்கம்தான் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு யாளியும் எப்படி இருக்கும்  என்பதை எல்லாம் நீங்கள் இணையத்தை துருவினால் தெரிந்து கொள்ள முடியும். மிக பயங்கரமான ஒரு பிரம்மாண்ட மிருகமாய் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் யாளிகளை செதுக்க வைத்திருந்த சூத்திரமாய் இருந்திருக்க வேண்டும். என் அலுவலகம் கலையோடு தொடர்புடையது. எங்கள் அலுவலக வாசலில் இரண்டு கல்லால் ஆன யாளிகள் இருக்கின்றன. எங்கிருந்து வாங்கியது என்ற விபரங்கள் இல்லாமல் கிடங்கில் கிடந்த அவை இரண்டையும் நான் தான் வெளியில் எடுத்தேன். அப்படி எடுத்துக் கொண்டு வந்து அவற்றை தண்ணீர் விட்டு கழுவி பார்க்கும் வரை அவை இரண்டும் சிங்கங்கள் என்றுதான் முதலில் நான் நினைத்தேன். 

உருண்டையான மிரட்டும் கண்களோடு முறுக்கிய மீசையோடு, தலையில் கிரீடத்தோடு அவை முன்னங்கால்களை மேலே தூக்கியபடி கம்பீரமாய் நின்று கொண்டிருந்தன. எனக்கு நம்ம ஊர் கருப்பசாமியின் சிலைதான் நினைவுக்கு வந்தது. இவை சிங்கங்கள் இல்லை யாளிகள் என்று அறிந்த பின்புதான் இப்படி  ஒரு விலங்கை ஏன் இந்தியா முழுதும் இருக்கும் கோயில்களில் பரவலாக செதுக்கி இருக்க வேண்டும்? ஏன் தமிழ்நாட்டிலிருக்கும் மிகைப்பட்ட கோபுரங்களை இந்த யாளிகள் அலங்கரிக்க வேண்டும்....? யாளிகளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு? அல்லது யாளிகளுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு...? இப்படி ஒரு விலங்கு பழங்காலத்தில் நிஜமாகவே இருந்ததா? கீழைநாடு என்றழைக்கப்படும் பரத கண்டத்தினர் மட்டும் எப்படி இவற்றை சிற்பத்தில் கொண்டு வந்தார்கள்...? இது வெறும் கற்பனையா? நிஜமா?



இணையத்தை இயன்றை வரை நான் உழுது பார்த்து விட்டேன். எங்குமே சரியான தகவல்கள் இல்லை. மிகப்பெரிய கற்பனையோடு யாளி என்ற மிருகம் இன்னும் தென் தமிழ்நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிக்கிறது என்ற ஒரு நாவலொன்றை யாரோ எழுதி இருக்கிறார்கள். அது போக யாளி என்ற மிருகம் குமரிக்கண்டத்தில் இருந்தது என்றும் குமரிக்கண்டம் தண்ணீரில் மூழ்கிய  போது அவை அழிந்து போய்விட்டன் என்றெல்லாம் அடித்து விட்டிருந்தனர். யாளி மனித ஆழ்மனத்திலிருந்து வெடித்து எழுந்த ஒரு அமானுஷ்ய மிருகம் என்றுதான் நான் எண்ணுகிறேன். என்னுடைய கணக்கு கூட்டல் மனோதத்துவ ரீதியானது. சில விசயங்கள் நமக்குள் தன்னிச்சையாய் தோன்றும். இதுவரையில் நாம் காணாத நிறங்கள், மனிதர்கள், நிலப்பரப்புகள், நிகழ்வுகள் என்று இதுவரையில் நாம் அறிந்திராத பல விசயங்கள் அவ்வபோது நம் நினைவுப் பகுதிக்குள் எட்டிப்பார்க்கும். கனவுகளில் வந்து ஏதேதோ கதைகள் சொல்லும்.

அறிவியலைப் பொறுத்தவரை மனித மூளை விசயங்களைக் கிரகித்துக் கொண்டு அதன் அடிப்படையில் தனக்கு வசதிப்பட்டவாறு அதை விரிவுபடுத்தி பார்த்துக் கொள்கிறது என்று சொல்கிறது. என் கேள்வி எல்லாம் இந்த படைக்கும் திறமை எங்கிருந்து மனிதனுக்கு வந்தது...? அல்லது இந்த கற்பனை ஏன் அவனுக்கு வரவேண்டும்..? இல்லாத ஒன்றை எண்ணிப் பார்க்கும் போதே அப்படி ஒன்று ஏன் இருக்க கூடாது என்ற கேள்வியும் உடன் வரத்தானே செய்கிறது.

ஒரு முறை என் அனுபவத்தில் இல்லாத ஒரு கிராமத்திற்குள் என் கனவில் ஒருநாள் நான் சென்றேன். அங்கே நிறைய பேர்கள் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஓவியமும் விப்ஜியார்(VIBGYOR) என்று நாம் சொல்லகூடிய அந்த ஏழு நிறத்திலுமே இல்லை. அந்த வர்ணங்கள் வேறு. ஏழு நிறங்களை மட்டுமே ஏந்திப் பிடித்துக் கொண்டிருக்கும் என் மூளையால் எப்படி இந்த நிறங்களை சிந்திக்க முடியும்...? கற்பனை செய்து பார்க்கவும் ஒரு தளம் வேண்டும்தானே...? எந்தத் தளத்திலும் நிற்காமல் எனக்குள் தோன்றிய அந்த வர்ணக்கலவைகளால் ஆன ஓவியங்கள் எல்லாம் எனக்கு அச்சு பிசகாமல் இப்போதும் நினைவிருக்கின்றன ஆனால் அப்படியான ஓவியங்கள் ஒன்றும் இந்த உலகத்தில் இல்லவே இல்லை.

இப்போது அதை நான் உங்களுக்கு காட்ட வேண்டுமெனில் வரைந்து காட்டமுடியும் ஆனால் நம்மிடம் அதே போன்று  வர்ணங்கள் இல்லை. ஏழு நிறங்களையும் எந்த விகிதாச்சாரத்தில் கலக்கினாலும் நான் கண்ட வர்ணங்கள் வரவே வராது. ஏழு நிற வர்ண திரவியங்களையும் நான் ஒரு பைத்தியக்காரனைப் போல கலக்கி கலக்கி சேர்த்து குறைத்து பார்த்தேன் ஆனால் நான் கண்ட அந்த வர்ணம் கிடைக்கவே இல்லை. ஒரு மாதம் முழுதும் எனக்கு அந்த ஓவியங்களின் நினைப்பாகவே இருந்தது. 

உலகின் மிகப்புகழ்பெற்ற அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களை எல்லாம் ஏக்கத்தோடு தேடித் தேடிப் பார்த்தேன். அவை எல்லாம் நான் கண்ட ஓவியத்தை போல இல்லவே இல்லை. ஒரு சில ஓவியர்களின் ஓவியங்கள் நான் கண்ட ஓவியங்களை ஒரளவிற்கு ஒத்து இருந்தது. அவர்களுக்கும் என் போன்ற கனவு வந்திருக்கக் கூடுமா என்று யோசித்துப் பார்க்கையில் எனக்கு ஏதோ ஒரு விசயம் இங்கே பொதுவாக இருப்பதாகப் பட்டது. இந்த உலகில் பல திசைகளில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே ஒரு மையம்தான் மூலமாய் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

மனித கற்பனைகள் எல்லாம் ஆழ்மனத்தோடு தொடர்புடையது. மைக்கேல் ஆஞ்சலோ ஏன் அப்படி குண்டு குண்டாய் ஆண்களையும் பெண்களியும் நிர்வாணமாக வரைந்தார்? அவருக்குள் ஏதோ ஒர் செய்தி அல்லது உந்துதல் அல்லது விருப்பம் அல்லது எங்கோ எப்பபோதோ அப்படி இருந்த நினைவுகள்  முட்டி மோதி கையில் வழிந்த போது அது ஓவியமாகி விட்டது. அடிப்படையில் அந்த ஓவியங்களை ரசித்த அத்தனை பேருக்குள்ளும் அந்த ஓவியம் ஏற்கெனவே இருந்தது என்று நான் சொன்னால் நீங்கள் கொஞ்சம் குழம்புவீர்கள்தானே....?

ஆமாம் புறத்தில் காணும் நமக்குப் பிடித்த எல்லா விசயங்களும் நமக்குள் ஏற்கெனவே ஏக்கமாய் நிறைந்து கிடந்தது தான். ஒன்று அப்படி நாம் முன்பு இருந்திருப்போம் அல்லது அதன் உடன் நாம் இருந்திருப்போம். அதை புறத்தில் காணும் போது அது நமக்குப் பிடித்துப் போகிறது. மனித ஆழ்மனம் விசித்திரமானது....அது எந்த அறிவியல் அறிவுக்கும் பிடிபடாதது. தன்னிச்சையானது. சுதந்திரமானது. கலைஞர்கள் அந்த சுதந்திரத்தோடே எப்போதும் பயணிக்கிறார்கள்.

யாளி இந்த பூமியைச் சேர்ந்த மிருகமாய் இருக்க சாத்தியமில்லை. நிஜமாய் இந்த உலகில் அப்படி ஒன்று இருந்திருக்க முடியாது ஆனால் அப்படி ஒன்று இருக்கவே முடியாது என்று நான் கூறமாட்டேன். யாளி இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் உயிர் வாழும் விலங்காயிருக்கலாம். மனித வாழ்க்கை இந்த பூமியில் காண்பது மட்டும் கிடையாது அது இந்த பிரபஞ்சத்தோடு தொடர்புடையது என்று காட்ட கோயிலுக்கு வரும் மனிதர்களிடம் எடுத்துச் சொல்ல.....


கோபுரத்திற்கு கோபுரம், மண்டபத்திற்கு மண்டபம், தூணுக்குத் தூண் இந்த யாளிகள் செதுக்கப்பட்டிருக்கலாம். யாளியை ஏதோ ஒரு தூணில் உற்று நோக்கும் யாவர்க்கும் அவர்கள் அறியாமலேயே அவர்களின் உள்ளுணர்வு தட்டி எழுப்பபடுகிறது. அது ஏதோ ஒரு பேரமைதியை நமக்குள் பரவ விடுகிறது. இத்தனை மிரட்டலாய் செதுக்கப்பட்டு காட்சி தரும் ஒரு விலங்கு அதாவது ஒரு யானையையே அதன் துதிக்கையை பிடித்து தூக்கி விசிறி அடிக்க முயலும் ஒரு விலங்கு, நமக்குள் இருக்கும் மனம் என்னும் மதம் கொண்ட மிருகத்தை உள்ளுக்குள் உருத்தெரியாமல் அழித்து பேரமைதிக்குள் நம்மை தள்ளி விடும் விந்தையும் நிகழ்ந்து விடுகிறது.

இனி கோயில்களுக்குச் செல்லும் போது யாளிகளை உற்றுக் கவனியுங்கள். அவை வெறும் சிற்பங்கள் மட்டும் அல்ல...யாரோ ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்று கொள்ளுங்கள். அது அவன் பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தை தன் மனமற்ற நிலையில் எட்டிப்பிடித்து அங்கே அவன் விருப்ப திசையில் எல்லாம் பயணித்து தேடிக் கண்ட மிருகமென்று அதை நினையுங்கள். மிரட்டும் விழிகளோடும் நீண்ட துதிக்கையினோடும் கோரப்பற்களோடும் இருக்கும் யாளிகளை காதலோடு பார்த்து....

என் பாரத தேசமே....!!!!! என் சனாதான தருமமே எத்தனை எத்தனை ரகசியங்களை நீ உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய் என்று கேட்டு உள்ளுக்குள் கேவி அழுங்கள். வாஞ்சையோடு யாளிகளை தடவிக் கொடுது யாளிகளை சினேகமாக்கிக் கொள்ளுங்கள்....மரணத்திற்குப் பிறகும் தொடரப்போகும் உயிரின் பயணத்தில் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு திசையில் யாளிகளை நாம் காணக்கூடும்....

அப்போது யாளிகள் சினேகத்தோடு  நம்மை அடையாளம் கண்டு அன்பு செய்யும் அற்புதமும் நிகழும். இந்த கட்டுரையை வாசித்து முடித்த பின்பு  உங்களுக்குள் இரத்தமும் சதையுமாய் உயிர் பெற்று இனி அலையப்போகும் யாளியை உருவாக்கியது வேறு யாரோ அல்ல...இதை வாசித்த நீங்கள்தான் என்று நான் சொல்வதை நீங்கள் மெளனமாய் யோசித்துப் பாருங்கள் அப்போது ஏன் யாளிகள் செதுக்கப்பட்டன என்ற உண்மை  உங்களுக்கு இன்னும் தெளிவாய் புரியும்.



தேவா சுப்பையா...





Comments

பேரமைதிக்குள் நம்மை தள்ளி விடும் விந்தை நிகழ்ந்து விட்டால் போதும்... ரசனைக்கு வாழ்த்துக்கள்...
Anonymous said…
Yaali holds the link between human, lion and monkey. Refer to vethathru maharishi and u may find ur answer there.
அதிர்ந்து போனேன் இந்த பதிவை வாசித்து போது .காரணம் யாளி பார்க்கும் முன் அதை பற்றிய தேடலில் பலமுறை நான் தொலைந்து போய் இருக்கிறேன்.நல்ல வேளையாக சமீப்பத்தில் வேதாத்திரி மஹரிசியின் மன வளக்கலை மன்ற மூத்த பேராசிரியர்,மனித உயிரின தன்மாற்றம் என்ற தலைப்பில் யாளியை பற்றி சொல்லி யாளியும் +ஒரு வகை குரங்கு இனமும் சேர்ந்து இயற்கை சட்டங்களான (1.இரு வேறுபட்ட உயிரினங்கள் உறவு வைது கொள்ளாது 2.அப்படி வைத்ஹ்டு கொள்ளும் போது பிறப்பு இருக்காது 3.அப்படியே இருந்தாலும் அது மறு புறப்பை தராத அலியாக இருக்கும் )மூன்றையும் மீறி 11 வேறுபட்ட தன் மாற்றங்கள் அடைந்து கடைசியில் உருவானவன் மனிதன் என்று சொல்லப்பட்டது.நான் இப்போது அந்த 11 தன் மாற்றம் பற்றி தேடிகொண்டு இருக்கிறேன்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல