Skip to main content

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே... விந்தையடி?!


ஒரு மாதிரியான தருணம்தான் அது. இமைக்க கூட மறந்து அவளின் விழிகளுக்குள் நான் கிடந்தது. காதலைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் என்ற ஒரு கேள்வி மமதையாய் புத்திக்குள் ஏறி சிவதாண்டவம் கூட அப்போது ஆடிக் கொண்டிருந்தது. காதல் வெளிப்படுவது விழிகளில்தான் என்று மீண்டுமொரு முறை காலம் எனக்கு மெய்ப்பித்தது. இதற்கு முன்பு இரண்டொரு முறை காதல் கண்களுக்குள்ளிருந்து என்னைப் பார்த்து என்ன செளக்யமா என்று கேட்டதும் உண்டு. நிறைய கண்களை நான் கண்டிருக்கிறேன் என்று சொல்லும் போதே ஆண்களின் கண்கள் எல்லாம் உங்கள் மனதில் இருந்து கழன்று போகக் கடவதாக;

ஆண்களின் கண்களைப் பற்றி பெண்கள் அல்லவா சிலாகித்து எழுத வேண்டும் அது பற்றிய கவலை எனக்கெதற்கு? குண்டு கண்கள், கூர்மையான கண்கள், சிவந்த வரியோடிய கண்கள், வெள்ளை வெளேறென்ற தும்பைப்பூ நிற கண்கள், துரு துரு கண்கள், சாந்தமான கண்கள், எப்போதும் கோபமேறிப்போய் உஷ்ணம் வீசும் கண்கள், வசீகரமாய் சொடக்குப் போட்டு அழைத்து இன்று இரவு எதுவும் வேலை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு சொக்க வைக்கும் கண்கள், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று அப்பாவியாய் பேந்த பேந்த விழிக்கும் கண்கள் என்று பெண்களின் கண்களைப் பற்றி டாக்டரேட் செய்யும் அளவிற்கு எனக்கு அனுபவம் உள்ளது என்கிற சுயதம்பட்ட நாற்காலியை எடுத்து ஒரு ஓரமாய் வைத்து விடுகிறேன்....

காதலோடு நான் கண்ட அந்தக் கண்களுக்கும் மேலே நான் சொல்லியிருக்கும் கண்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. காதல் நிறைந்த கண்கள் கொஞ்சம் மிதமான கண்ணீரில் நீந்தும் மீன்களைப் போலவே துடித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றும். வாழ்வா சாவா என்பது போன்று ஒரு வித படபடப்புடனேயே தனக்குப் பிடித்தவனின் கண்களை பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த வாஞ்சையை எப்படி வார்த்தைப் படுத்துவது என்று என்னைப் போன்ற கிறுக்கன்களால் மட்டுமே யோசிக்க முடியுமோ என்னவோ....

நான் அவள் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் தட்டுத் தடுமாறி பேச முயன்ற அத்தனையையும் இம்மி பிசகாமல் சொல்லிக் கொண்டிருந்த அந்த கண்களுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவி என் பார்வை பயணித்துச் சென்று ஸ்தம்பித்து நின்றது அவளின் இதயமாயிருந்தது. ஓ....கடவுளே இத்தனைக் காதலையும் சுமந்து கொண்டு எப்படி துடித்துக் கொண்டிருக்கிறது இந்த சிறு இதயம் என்று நான் திணறலாய் யோசித்துக் கொண்டிருக்கையில் வாஞ்சையாய் என் கரம் பற்றிக் கொண்டாள் அவள்.

தேவதை, அழகி, இம்சை, நிலவு, தென்றல், குளிர், நறுமணம், மென்மை, மலர், பட்டாம் பூச்சி, கவிதை, மழை, நனைதல், அருவி, வானம், நட்சத்திரம், யாருமில்லாத பெரும் மெளனம், இளையராஜாவின் ஒரு பழைய பாடல் என்றெல்லம் வர்ணித்து தனக்குப் பிடித்தவளை ப்ரியமான வார்த்தைக்குள் கொண்டு வர எவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கும் இந்த உலகம் என்று நினைத்த போது உவமைகள் எல்லாம் காகிதப்பூக்களாய் எனக்கு தெரிந்தன. இது வேறு விதமானது என்று எனக்குத் தோன்றியது. இது சுகமும் அல்ல, துக்கமும் அல்ல. இது ப்ரியமானது அல்ல வெறுப்பானதும் அல்ல. இது இனிமையானதும் அல்ல கொடுமையானதும் அல்ல. இது எதுவுமே கிடையாது ஆனால் இது தான் எல்லாமே......!!!!!

அவள் என்னெதிரில் அமர்ந்திருந்தாள். குறைந்து போய்விடாமல் அவளின் முன்பிருந்த முழுக் குவளையில் ததும்பிக் கொண்டிருந்த பழரசம் இன்னமும் அவளின் தொண்டையை நனைத்து நகரும் பாக்கியம் கிட்டவில்லையே என்று கொதித்துக் கொண்டிருப்பது போல தோன்றியது எனக்கு.....

உண்மையில் அப்போது மொழி என்பது அனாவசியமானதாய் எனக்குப் பட்டது. பேசவோ கேட்கவோ நாங்கள் இருவருமே விரும்பி இருக்கவில்லை. மெளனத்தை மென்று கொண்டிருக்கையில் சப்தநாய்களின் குரைச்சல்கள் யாருக்குத்தான் பிடிக்கும்...? நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரு ஓவியம் ஒன்றைக் காலம் தீட்டிக் கொண்டிருப்பதாய் பட்டது. தூரிகைகள் இலக்கற்று பயணிக்கும் அந்த சுகத்தில் நான் தூரிகையாகவும் அவள்  என்னை நனைத்துக் கொண்டிருக்கும் வர்ணக் கலவையாகவும் எனக்குத் தோன்றியது.

இந்தக் காதல் ஏன் எனக்கு மொழி வடிவமாகவோ, அல்லது இசை வடிவமாகவோ அல்லது ஏதோ ஒரு கற்பனை வடிவமாகவோ தோன்றாமல் ஓவிய வடிவமாய் தோன்றுகிறது என்று யோசிக்க முடியவில்லை என்னால்....

அவள் இமைத்தாள்....
தூரிகை நகர்ந்தது....
அவள் சிரித்தாள் ....
தூரிகை நகர்ந்தது....
அவளின் கேசம் காற்றில் பறந்தது
தூரிகை நகர்ந்தது....
விழிகளால் என் விழிகளுக்கு
ஒத்தடம் கொடுத்தாள்....
தூரிகை நகர்ந்தது....
அந்த மாலை நேரத்துக் காற்றில்
திரைச்சீலைகள்...அங்குமிங்கும் பறந்தன....
தூரிகை நகர்ந்தது....,
நான் ஏதுமற்ற தூரிகை...
அவள் எல்லாமான வர்ணக்கலவை...!

எனக்குள் ஒரு காட்சியாய் தைல வண்ண ஓவியமாய் அந்த சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. இது அழகு. இது மென்மை. இது சுகம். இது நலம் என்றெண்ணியபடியே நான் ஆழமாய் பெருமூச்சு விட்ட போது அவள் சும்மாயிருந்திருக்கலாம்.... எனக்குள் சாதாரணமாய் வெளிப்பட்ட பெருமூச்சு அவளுக்குள்ளும் இருந்து வெளிப்பட்டு அடங்கிய பொழுதில் ஏறி இறங்கிய அவளின் கூர்மையான மார்பின் மீதிருந்து தட தடவென்று நான் கீழே விழுந்து பின் கவனமாய் மேலேறி அவளின் மென் உதடுகளின் மீதமர்ந்து கொண்டு அவள் சுவாசித்தலை மீண்டும் ரசிக்கத் தொடங்கினேன்....

கேட்க யாருமில்லை அங்கே என்பது தெரிந்திருந்ததால் பேச எதுவுமில்லை என்பது இருவருக்குமே தெரியும். விழிகள், இமை, நாசி, காதுமடல்கள், காற்றில் பறக்கும் கேசம், நீளமான கழுத்து, ஆழமான பார்வை....அவள், நான்.....

இதற்கு மேல் அங்கே வேறொன்றும் இல்லை பேசித் தொலைக்க...! பேசி பேசி என்ன செய்து விட்டது இந்த உலகம். காதல் என்று சொல்லி பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறது. திருமணம் என்று சொல்லி ஒருவரை ஒருவர் சிறையிலடைத்து வைக்கிறது. பொருள், அருள், தேவை, அனாவசியம், அரசியல், தத்துவம், ஆன்மீகம், பக்குவம், பரவசம், புத்தகம் புண்ணாக்கு என்று ஏதேதோ பேசிப் பேசி எப்போதும் இரைச்சலுக்குள் வாழச்சொல்கிறது.....

நானும் நீயும்....நீயும் நானும் 
எங்கிருந்து வந்தோம்....?
யார் சொல்லிக் கொடுத்தது 
நமக்கு சப்தமில்லாத இந்த
ஜீவ இசையை...?

ஜீவன்களுக்கான இசையை எப்போதும்
இசைத்துக் கொண்டிருக்கிறது காலம்
எனக்கு இவள் இசைக்கிறாள்...
அவளுக்காய் நான் இசைக்கிறேன்....
காலங்களைப் பற்றி எங்களுக்கென்ன கவலை
இதோ நகர்ந்து கொண்டே இருக்கிறதே காலம்
இது தானே எங்களைச் சேர்த்தது....
இதுதானே பிரிக்கவும் செய்யும்....
மீண்டும் இதுவன்றி
வேறு எது எங்களை இணைத்து விட முடியும்?

புலன்களுக்குள் பூட்டுப் போட்டுக் கொண்டு வாழும் மானுடர்க்கு நடுவில் திக்குகளற்றுப் பாய்பவர்களுக்கு  ஏது பூட்டு? எது சாவி? உடல் என்பது மனதின் பார்வைதானே...சூட்சுமங்களை இல்லை என்று சொல்லி விட்டால் அவை இல்லை என்றாகி விடுமா என்ன?

மீண்டும் அவள் கரம் பற்றினேன்...
அவள் கண்ணீர் சிந்தினாள்...
என் கைவிரல்களில் சூடாய் பட்டுத் தெரித்தது
யுகங்களாய் இந்தப் பிரபஞ்சத்தில் 
பயணித்துக் கொண்டிருக்கும் காதலின் சூடு
அவள் கண்களிலிருந்து அது ததும்பிக் கொண்டிருந்தது...

எனக்கு என்னவோ செய்தது. கட்டியணைக்க நினைத்தபடி அவளின் தலை தடவினேன்.... வாஞ்சையான காதலனாய் மட்டுமல்ல.....வலி நிறைந்த தகப்பனாயும் கூட....! காதலனாய் இருப்பது சுகம்தான்....அதைவிட பெருஞ்சுகம் அதே காதலிக்கு  தகப்பனாய் இருப்பதும்தான்....

பிரிந்து விட்டோம்....., மீண்டும் சேர்வோம்....!



தேவா சுப்பையா...





Comments

தகப்பனுமானவன்...
ஊருக்குச் சென்று திரும்பியதும் உங்கள் எழுத்தைப் படிப்பதில்தான் எத்தனை சுகம்...

அருமை அண்ணா.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல