Skip to main content

பாம்பு வந்திருச்சு....!



திடீரென்று ரமாதான் கத்தினாள். ஞாயிற்றுக் கிழமை மதியத்தை ஓய்வாய் ஈசிஸேரில் படுத்து கழித்துக் கொண்டிருந்த பரந்தமான் கையிலிருந்த குமுதத்தைத் தூக்கி எறிந்து விட்டு  பதறி அடித்துக் கொண்டு அடுக்களைக்குள் ஓடினார். வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த பாபு பம்பரத்தை திண்ணையில் வீசி விட்டு வீட்டுக்குள் ஓடினான்.டேய்.. தம்பி உள்ள வராதடா.....அடுக்களைக்குள்ள பாம்பு வந்திருக்குடா என்று மாலு கத்தியபடியே திண்ணைக்கு ஓடி வந்த போது அவள் சப்தத்தைக் கேட்டு அறைவீட்டிற்குள்ளிருந்து லுங்கியை தூக்கிக் கட்டியபடி எங்கடி பாம்பு...? என்று வெளியே வந்த முரளியிடம் கிச்சன்ல அண்ணா என்று பயந்தபடியே சொன்னாள் மாலு...

முரளி கிச்சனுக்குள் சென்ற போது அவளுடைய அம்மா ரமாவும், அப்பா பரந்தமானும் கையில் விறகுக் கட்டைகளோடு நெல் கொட்டி வைத்திருக்கும் பத்தாயத்துக்குப் பின்னால் இருந்த அண்டா குண்டக்களைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். டேய்... நீ சின்னப் பையன் வெளில போடா பாம்பு உன்னைப் பிடுங்கி கிடுங்கி வைக்கப் போகுது...போய் வாசல்ல தம்பி தங்கச்சிகள பாத்துக்க என்று சொன்ன ரமாவைப் பார்த்து அப்போதுதான் கொஞ்சமமாய் அரும்பிக் கொண்டிருந்த மீசையை தடவியபடியே அம்மா.... காலேஜ் செகண்ட் இயர் படிக்கிற என்னப் பார்த்தா சின்னப்பையனா தெரியுதா....

விடுங்கம்மா நான் பாத்துக்குறேன் சொன்னபடி ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வந்த முரளியை ஏற இறங்க பார்த்த பரந்தாமன், டேய் போய் பக்கத்து தெரு சைக்கிள் கடையில தனபால் உட்காந்திருப்பான் அவனைக் கூட்டிட்டு வேகமா ஒடியா என்று சொல்ல, ஏங்க தனபால் என்ன பாம்பு பிடிக்கிறவறா என்ன? அவர் சிகரட்தானே நல்லா பிடிப்பார் என்று பரந்தாமன் வீட்டுக்குத் தெரியாம அடிக்கும் திருட்டு தம்மை சீண்டினாள் ரமா. அப்போதுதான் பரந்தாமனுக்கு உறைத்தது பத்தாயத்துக்குப் பின்னால் இருக்கும் செல்ஃபின் மேல் கட்டையில் இருக்கும் சிகரட்டை ரமா பார்த்தாள் நாய் மாதிரி கத்துவாளே என்று...

எப்படியாவது ரமா கண்ணுக்கு தெரியாமல் எடுத்து மறைக்க வேண்டுமே என்று யோசித்தார், சிகரெட் பாக்கெட் பாம்பை விட பயங்கரமாய் அவரை பயமுறுத்த...

டேய்.. சொல்லிட்டே இருக்கேன் சும்மா நின்னுட்டே இருக்க போய் தனபால கூப்டுட்டு வாடா காசு கொடுத்தாதான் போவியோ என்று முரளியை பரந்தாமன் அதட்ட முறைத்தபடியே வாசலுக்கு வந்த முரளி தன் வீட்டு முன் தெருவே கூடி நின்று வேடிக்கைப் பார்ப்பதை கவனித்த போதுதான் கூட்டத்துக்கு நடுவே எதிர்வீட்டு தேவகி நிற்பதையும் கவனித்தான்...

சுரீரென்று மண்டைக்குள் எதோ உறைக்க உள்ளே மறுபடி ஒடினான். அப்பா அந்த பாம்ப நானே அடிசுடுறேன் பா.. ரொம்ப ஈசி என்று அவனும் பத்தாயத்துக்குப் பின் இருந்த அந்த இடைவெளிக்குள் நுழையப் பார்க்க பரந்தாமன் அவனை முறைத்தார். டேய் போய் தனபால கூட்டிட்டு வாடா படுவா.... பாம்படிக்கிறானம் பாம்பு என்று  அவர் சொல்ல அரைமனதோடு மெல்ல திரும்பி ஓட்டமாய் கடைத்தெருவுக்கு ஓடின முரளிக்கு எதிர் வீட்டு தேவகி கொடுத்த லவ் லெட்டரை பத்திரமாய் பத்தாயத்திற்குப் பின்னால் இருந்த பழைய ஷெல்ஃபிற்குள் ஒளித்து வைத்திருப்பதை பாம்படிக்கிறேன் பேர்வழி என்று அப்பா பார்த்து விடக் கூடாது என்ற பயம் நெஞ்சைப் போட்டு பிசைந்து கொண்டிருந்தது.

மாலுவும், பாபுவும் தெருவில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பாம்பைப் பார்க்காமலேயே கதை அளந்து கொண்டிருந்தார்கள். இம்ம்பூட்ட்ட்ட்ட்ட்டு பெருசு தெரியுமா... என்று தன் குட்டைக் கையை நீட்டி கதையளந்து கொண்டிருந்த பாபுவின் காதி மாலு மெல்ல போய் ஏதோ கிசு கிசுக்கவும் அதுவரையில் உற்சாகமாய்  பேசிக் கொண்டிருந்த பாபுவின் முகம் இருண்டு போனது...

ஏண்டி உன் புத்தகப் பைக்கட்டுக்குள்ள தான வைக்கச் சொன்னேன்...ரெண்டு சப்ஜெக்ட்ல நான் ஃபெயிலு வேறடி, அப்பாக்கு தெரியாம அம்மாகிட்ட கையெழுத்து வாங்கி சமாளிச்சிடலாம்னு நினைச்சேனே பன்னி எரும இப்போ சாமன் சட்ட நகட்றேன்னு செல்ஃப்ல  ஒளிச்சு வச்சிருக்க என் ப்ராக்ரஸ் ரிப்போர்டை பாத்து தொலைச்சா  பாம்பை விட்டுட்டு என்னைய போட்டு அடிக்க ஆரம்பிச்சுடுவாரே...

என்று அழுகமாட்டாமல் சொல்லிக் கொண்டிருந்த பாபுவின் சொக்காயை பிடித்து தொங்கியபடி ஏண்டா பாபு....பாம்ப நீ பாத்தியாடா? ரொம்ப நீட்டமாடா? என்ன பாம்புடா அது...பாம்பு மேல படம் இருந்துச்சுனா அடிக்கபுடாதும்பி அது சாமி பாம்பு....நீ ஆடி வெள்ளி படம் பாத்தியான்னா மாரியாத்தாதான் பாம்பு மாதிரி வந்து நம்மல செக் பண்ணுமாம்...

சாமி பாம்ப அடிச்சா அவ்ளோதான் அது கருவம் வச்சு அடுத்த ஜென்மத்துல  கொன்னே போட்டுருமாம்...அப்டி இல்லேன்னா அதோட தொணை பாம்பு நம்மள கருவம் வச்சி கொத்திடுமாம் ஒங்கப்பா அம்மாவுக்கு தெரியாது போல இருக்கு...போய்ச் சொல்லுடா என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே இடுப்புக்கு கீழ் இறங்கிய கால்சட்டையை சரி செய்தபடி சொன்ன கோபுவை பார்த்து முறைத்தான் பாபு....

நீ போடா அங்கிட்டு இவரு பெரிய கலிக்ட்டரு வன்ட்டாரு மயிராண்டி என்று கத்தின பாபுவிற்கும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவன் அக்கா மாலுவிற்கும் ப்ராக்ர்ஸ் ரிப்போர்ட் அப்பா பரந்தாமனின் கையில் சிக்கி விடக் கூடாது, பெயிலானததுக்கு பாபுவிற்கும் அதை சொல்லாமல் மறைத்ததற்கு மாலுவிற்கும் செமத்தியாய் பூசை விழும் என்ற பயத்தில் பாம்பு பயம் எல்லாம் பறந்து போயிருந்தது.

அந்த அண்டாவ நவுத்து, இந்த ஸ்டூல புடி, அந்த ஜன்னலைத் திற, டார்ச்சை தூக்கி அடி...என்று விறகு கட்டையை வைத்து தட்டி அடுப்பங்கறையையே அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருந்த பரந்தாமன் ரமாவைப் பார்த்து ஏண்டி எங்கடி இந்த முரளிப்பய தனாபால கூப்ட இம்புட்டு நேரமா....நையாப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லடி உன் மகன் உதவாக்கரை என்று கத்தியபடியே சிகரெட் பாக்கெட்டை ரமா பார்த்தால் இன்னைக்கு நைட் ஆரம்பிக்கிற கச்சேர் ஒரு மாசத்துக்கு ஓடுமே என்றும் பயந்து கொண்டும் தானிருந்தார்...

நையாப் பைசாவுக்கு முரளி பிரயோசனம் இல்லை என்று பரந்தாமன் சொல்லி முடித்த உடனேயே பைசா என்ற வார்த்தை பொளேர் என்று ரமாவை அறைந்து அவள் தூக்குவாளிக்குள் பரந்தமானுக்குத் தெரியாமல் சீட்டுப் பிடித்து சேர்த்து வைத்திருந்த 5000 ரூபாயை  ஞாபகப்படுத்தியது. அடா...டா இந்த மனுசன் கண்னுல காசு பட்டுச்சுன்னா....காசு நம்ம கைய விட்டுப் போறதோட இல்லாம, பாழாப் போன மனுசன் சந்தேகப்பட்டே கொன்னுடுவானே இனி சல்லிக் காசு எக்ஸாட்ட்ராவ கையில கொடுக்க மாட்டானே என்று ராமா யோசித்துக் கொண்டிருந்த போதே அலமாரியிலிருந்த தூக்கு வாளியை பரந்தாமன் எடுத்து நகர்த்தப் போக...


ரமா பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் விக்கித்து நிற்க,  தன் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை அப்பா பார்த்து விடுவாரோ என்று பயந்தபடியே எட்டிப்பார்த்த பாபு சரியாக பரந்தாமன் தூக்கு வாளியை எடுக்கப் போக எங்கே  ப்ராக்ரஸ் ரிப்போர்ட் தொபுக்கடீர்  என்று சரிந்து அப்பா முன்னால் விழுந்து விடுமே என்று பயந்த பாபு....அப்ப்ப்ப்ப்ப்ப்பா.... பாம்பு இங்கருக்க்கு..... என்று வேண்டுமென்றே கத்தி ஒரு மூலையிலிருந்த பொந்தைக் காட்ட....

முரளியும் பரந்தாமனின் நண்பர் கோபாலைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குள் வரவும் சரியாய் இருந்தது.

பாபுவின் அலறைக் கேட்ட பரந்தாமன் தூக்கு வாளியை விட்டு விட்டு ஜம்ப் பண்ணி ஓடி அவன் காட்டிய பொந்துக்கு எதிரே ஓடி வந்து நின்று கொண்டார் பரந்தாமன்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா சீட்டுப் பணம் தப்பிச்சுது என்று ரமா நிம்மதி பெருமூச்சு விட...

நான் பாத்தேன் பாம்பு... இந்த பொந்துக்குள்ளதான் போச்சு.. என்று பாபு சொல்ல... .சின்னப் பிள்ளை பொய் சொல்ல மாட்டான்யா... வா தேடிப்  பாப்போம் கிடைக்கலேன்னா இந்த பொந்துகுள்ளதான் இருக்கணும், ஏம்மா முதல்ல ஒரு துணி கொடுங்க என்று  தனபால் கேட்க பழைய கைலி ஒன்றை தனபாலிடம் கொடுத்தாள் ரமா. பாபு காடிய பொந்தை முதலில் துணியைச் வைத்து அடைத்தார் கோபால்.

மறுபடி பாம்பு தேடும் படலம்  தொடங்க.. பாபு நிம்மதியோடு வெளியே ஓடினான் விளையாட...!

தனாபாலும், பரந்தாமனும், முரளியும் ஆளுக்கொரு கம்போடு அடுப்படியில் அங்குமிங்கும் சுற்றித் தேடித் தேடி எங்கும் பாம்பு கண்ணில் படவில்லை,  தனபால் காலில் சிக்கிய சிகரெட் பாக்கெட்டை  யாருக்கும் தெரியாமல் பாக்கெட்டில் சொருகிக் கொள்ள, முரளி தேவகி கொடுத்த லவ் லெட்டரை மெல்ல எடுத்து கசக்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்...

பாம்பு அந்த பொந்துக்குள்ள தான்பா போயிருக்கணும்..வேற எங்க போயி இருக்கும்...நாமதான் இம்புட்டு அலசி பாத்துட்டமே....என்ன பண்ணலம் இப்ப... என்று தனபாலைப் பார்த்தார் பரந்தாமன்...

சரி..சரி கொஞ்சம் சிமிண்ட்டும் மண்ணும் வாங்கிட்டு வாங்க அந்த இடத்தைப் பூசி அடைச்சிருவோம், பாம்பு உள்ளேயே செத்துப் போய்டும் என்று தனாபல் சொன்னதைக் கேட்ட பரந்தாமன்...

முரளியைப் போய் சிமிண்டும் மண்ணும் வாங்கி வரச் சொன்னார். பாபுவும், மாலுவும் மூணாவது வீட்டு வாசலில் ரொம்ப நாளாய் கிடக்கும் வீடு கட்டி மீதமான செங்கற்களை கொஞ்சம் பொறுக்கி வந்து வீட்டில் கொடுத்தனர்.

ஏண்டி பாம்ப நீ பாத்தீல்ல என்ன பாம்பு அது ...நல்ல பாம்பா இருந்தா நாகத்தம்மனுக்கு காசு முடிஞ்சு போட்றணும் பாத்துக்க என்றார் பரந்தாமன்.

ஏங்க என்ன பாம்புன்னு எல்லாம் எனக்கு எப்டிங்க தெரியும்...? ஆனா நல்ல பாம்பு மாறிதான் இருந்துச்சு....எதுக்கும் நான் காசு முடிஞ்சு போட்டுறேன் ஆத்தாதான் தெரியாம நாம செய்ற தப்பை எல்லா மன்னிச்சு காப்பத்தனும் கன்னத்தில் போட்டுக் கொண்டால் ராமா.

முரளி வாங்கி வந்த சிமிண்ட்டையும் மண்ணையும் கலந்து பூசுவதற்கு முன்னால் பொந்திற்குள் செங்கலைப் பொடித்து போட்டு நல்ல இறுக்கமாய் கட்டையை வைத்து குத்தி மேலே சிமிண்ட் போட்டு பூசி முடித்தார் கோபால்.

இனி வெளியே வர முடியாது, பய உள்ள்யே மாட்டிக்கிட்டான் என்று சிரித்தார் தனபால். சரி சரி.. இந்த சாமான் சட்டை எல்லாம் நவுத்தி வை... இந்தா வந்துர்றேன் என்று சட்டையைப் போட்டுக் கொண்டு கோபாலின் தோளில் கை போட்டபடி வெளியே கிளம்பினார் பரந்தாமன். சிகரெட் பாக்கெட் கோபால் பாக்கெட்டில் இருப்பதை ஏற்கெனவே அவர் கவனித்திருந்தார்...

மாலுவும் பாபுவும் தெருவில் ஓடிப்போய் பாம்பு சிறைப்பட்ட கதையை சொல்லி அளந்து கொண்டிருக்க முரளி ஜன்னல் வழியே வாசலில் நின்றிருந்த எதிர் வீட்டு தேவகியோடு கண்களால் பேச ஆரம்பித்திருந்தான்.

ரமா சாமான்களை ஒதுங்க வைத்து விட்டு ....பளீச் சென்று கொல்லைக் கதவை திறந்து வைத்து விட்டு கொல்லைக்குள் சென்று பொழுதாயிப் போடுச்சு....பாம்பு வந்தா என்ன பரதேசி வந்தா என்ன என் வேலையையும் நாந்தான் பாக்கணும்... என்று அலுத்து கொண்டே...பாத்திரம் தேய்க்க ஆரம்பித்த போது....

யாருமில்லாத அந்த அடுப்பங்கறையின் பத்தாயத்திற்கு பின்னால் குப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த சர்வப் பானைக்கு பின்னாலிருந்து எட்டிப் பார்த்தது....

அந்தப் பாம்பு...

நாக்கை நீட்டி ...நீட்டி பயந்தபடியே பேந்த பேந்த முழித்தபடி....திறந்திருந்த கொல்லைக் கதவு வழியே தப தபவென்று....வெளியே கொல்லைக்குள் ஓடியே போனது அது...!





தேவா சுப்பையா...





Comments

அருமையான கதை அண்ணா...
ஒரு பாம்பு, பலரின் மனநிலை... ஹா... ஹா.... சூப்பர்.
தனபால் ஒரு இடத்தில் மட்டும் கோபால் ஆயிட்டாரு... பாருங்க...

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த