Skip to main content

ஈஸ்வரா...


எல்லோரும் போன பின்பு சடலம் மட்டும் தனியாய் கிடந்தது. மாலை பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். நாலு ஆட்களை ஒன்றாய் அடித்து வீழ்த்தும் திடகார்த்தர உடம்பு. சவக்கு சவக்கு என்று வெற்றிலையை மென்றுகொண்டே  தலையில் போட்டிருந்த கட்டை அவிழ்த்துக் கொண்டே நிமிர்ந்தவள் என்ன தம்பி நீங்க போல இன்னும்? இன்னுமில் அதட்டல் அதிகம் இருந்ததது. இல்லங்க போகணும், யாரு இவுக உங்களுக்கு? மாம பயனுங்க, ஒரே செட்டு  தொண்டையை அடைத்த அழுகையை விழுங்கிக்கொண்டேன்.

நகராட்சி மின் மைதானம், மின் மைதானமென்றால் மின்சாரம் இல்லை. கேஸ் அடுப்பு வைத்து எரிப்பார்க்ள். அதேவிறகுதான் ஆனால் எரியூட்டுவது கேஸ் அடுப்பு. பூங்காவைப் போல சுற்றிலும் சுத்தமாய் அமைதியாய் இருந்த அந்த இடத்தை மயானம் என்று சொல்லவே முடியாது. சுடலையின் பொடி பூசி எரியும் பிணங்கள் முன்பு அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பானாம் சிவன். ரெளத்ரம் பொங்க யோசிக்கும் அந்த இரவுகளில் ருத்ரனை பார்க்கவே அகோரமாயிருக்குமாம். அந்த அகோரி விடியற்காலையில் எரிந்த பிணத்தின் கபாலம் ஏந்தி பிட்சை பெற ஊருக்குள் வருவானம். கபாலி, கபாலி என்று ஊரே  நடுங்கி பிட்சை இடுமாம். சவமறிந்தவன் பின் சிவமறிந்தவன் ஆனான். யுகங்களுக்குப் பிறகும் மயானம்தான் மனித மனங்களை சில மணி நேரங்களாவது சாம்பலாக்க வல்லதாய் இன்னமும் இருக்கிறது.

அந்த மின் மையானத்திற்குள் ஒரு புல் மேடைக்கு நடுவே தியான மண்டபம் வைத்திருக்கிறார்கள். சாவுக்கு வந்தவன் எவன் தியானமென்று தனியே செய்யப்போகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்தவனை ஏந்தம்பி எப்டி செத்தாப்ள...

இன்னும் மூன்று வெற்றிலைகளை ஒன்றாய் சுருட்டி உள்ளே புகையிலை வைத்து சுண்ணாம்பு தடவியபடி கேட்டவள்  கையில் ஒட்டியிருந்த சுண்ணாம்பை கண்டாங்கியில் துடைத்துக் கொண்டாள். எங்கூட்டுக்காரரும் நாலும் வருசம் முன்னாடி செத்துப் போய்ட்டாப்ள, சொல்லச் சொல்லக் கேட்டாதானே கண்டாரஒலி மயங்க தெருவுக்கு நாலு கட தொறந்து வச்சிருக்காய்ங்க, பொழுது விடிஞ்சா அடைஞ்சா அதேன் கதி...

ப்ரீஷருக்குள் இருந்து எடுத்த கோழியை தண்ணீரில் முக்கி வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் இளகுவது போல ஐஸ் பாக்ஸின் விறைப்பு கொஞ்சம்கொஞ்சமாய் விலக விறைத்து நெஞ்சில் மடக்கி வைத்திருந்த கை விலகி கீழே விழ, ஏதோ உயிர் வந்துவிட்டதைப் போலத் தோன்ற திடுக்கிட்டு பொன்னம்மாக்கா.... என்று கத்தினேன். கிளம்புங்கப்பு, பயந்துகிட்டு எல்லாம் இங்கன ஒக்காரப்புடாது அதுகதேன் எங்களுக்கு சாமிக, கிளம்புங்க கிளம்புங்க....அதட்டினாள்.

இல்ல கையி....

எங்கூட்டுக்காரரு கண்ட்ரோலுல சுத்திப்பட்டியில இருக்க பன்னென்டு சுடுகாடு வருமப்பே தனியா நின்னு ஒரு நாளைக்கு பத்து பதினஞ்சு உருப்படி கூட செய்வாப்ள, நெஞ்சுரமான ஆளு, தண்ணியத் தண்ணியக்  குடிச்சு கிறுக்கோண்டு போயிருச்சு, நிதம் அடி நிதம் மிதி, எதித்து நின்னு பொடணில நாலு போடு போட்டேன் ஒரு நா, முடியாமப் படுத்துக்கிடுச்சு அதோட எந்திருக்கல...

மணி மூணு ஆச்சு நீங்க போங்க, கொள்ள வேல கிடக்கு,  காலையில வாங்க என்று அவள் சொன்ன போது இரண்டு பையன்கள்  வந்தார்கள். ஏஞ்சின்னமா கூப்டு விடல வந்துருப்போம்ல  ஏன் தனியா நின்னுகிட்டு இருக்க...

அடப்போங்கடா நான் பாத்துகிறேன், அவர்களை விரட்டிவிட்டவள்,

சில நேரம் நைட்டு பத்துக்கு வரும், பதினொன்னுக்கு வரும் இவங்க வருவாய்ங்க சின்னம்மா நாங்க நிக்கிறோம்னு சொல்லுவாய்ங்க, எங்க வீட்டுக்காரரு அண்ணன் மயங்கே...சின்னப்பயலுக பாவம் பயக்கக் கூடாதுன்னு வெரட்டி விட்ருவேன். நான் எங்க வீட்டுக்காரர கல்யாணம் செஞ்சு நாலாம் நாலு சுடுகாட்டுக்கு வந்தவ கூட மாட ஒத்தாச செஞ்சு செஞ்சு பழகிக்கிட்டேன். எல்லாப்பயலுகளும் மாமன்பாங்கே, மச்சாம்பாங்கே, அண்ணன் தம்பின்னு, அக்கா, தங்கச்சின்னு கதறுவாய்ங்கே,   கொள்ளிய வச்சுக் கொளுத்திப்புட்டு திரும்பிப்பாக்காம போயிருவாங்கே... அம்ம்புட்டுப் பேரும் போனப்புறம் இதுகளப் பாக்குறப்ப ப பச்சப்புள்ளைக மாறி தெரியுமப்பு...

எஞ்சாமிகளா நல்ல படியா போய்ச் சேருங்கன்னு வேண்டிக்கிட்டே எரிச்சு முடிப்போம். எனக்கு அழுகை வந்தது. சிறுவயதிலிருந்து சோடி போட்டு சுத்தின மாப்ள பேச்சு மூச்சு இல்லாம யாரோவாக கிடந்தது அடி வயிற்றைப் பிசைந்தது.

கதை ரொம்ப நல்லா கேக்குற ராசா....? ஏன் நீ இங்க உக்காந்து இருக்க ஒங்க மாமா மயன் எந்திருச்சு வருவான்னுட்டா.....கெக்கேக்கெக்கே என்று சிரித்தவள் விதி முடிஞ்சா போய்ச் சேரவேண்டியதுதேன்…..

செத்தா அப்புறம் அங்கிட்டு ஒண்ணுமில்லை. பேயி, பிசாசுன்னு, சாமி பூதம்னு பொழுது போக நாம பேசிக்கிற வேண்டியதுதான். எனக்கு என்னவோ அந்த மயானம் வேறு கிரகத்தில் இருப்பது போலத் தோன்றியது.

இல்லங்கம்மா, என்ன பண்றீங்கன்னு பாக்கத்தான் ஒக்காந்து இருந்தேன், இனிமே அவர பாக்க முடியாதுல்ல, உலகமெல்லாம் சுத்துன ஆளு கடைசியா அந்தகெடங்குக்குள்ள போறத பாக்கணும்...

நான் சொன்னதை கவனிக்கவில்லை....அவள்

அவள் வெறித்துக் கொண்டிருந்த திசையில்  காட்டுப்பனைகள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன. படக்குனு செத்துப் போயிட்டாரு எங்காளு, பேசிக்கிட்டே இருந்துச்சு, வாந்தி எடுத்துச்சு பொசுக்குன்னு தலை சாஞ்சுருச்சு, கூடி அழுது அம்புட்டுப் போரும் தூக்கி எடுத்து போகயில முச்சந்தியோட என்னைய வீட்டுக்குப் போகச் சொன்னாக...

போங்கடா பொச கெட்டவைங்களா எம்புருசன நானே எரிச்சுக்குறேன்னு சொல்லவும் அதெல்லாம் கூடாதுன்னு அங்கனகுள்ள இருந்த ஆளுக மல்லுக்கு நின்னாய்ங்க போங்கடா  நீங்களும் ஒங்க இதுவும்னு சொல்லிட்டு சுடுகாட்டுக்கு போய்ட்டேனப்பா... எட்டு மணிக்கு எல்லாரும் சொல்லி சொல்லிப் பாத்துட்டு போயிட்டாக, ஆத்தா தண்ணி சாப்டுக்க ஆத்தா நாங்க இங்கனக்குள்ளதான் இருக்கம், என்னமாச்சும்னா கூப்டுனு இவரோட அண்ணனும் அண்ணன் மயங்களும் சொல்லிட்டுப் போனப்புறம், அந்த மனுசன மேல விழுந்து அழுதேன்.

ஏங்கமா கஷ்டமா இல்லையா?

அவ்ளோ நாளு பொணம் எரிச்சப்ப தெரியலைய்யா, அன்னிக்கு நானும் செத்தரணும்னு தோணிச்சு எங்களுக்கு புள்ளக்குட்டிகள் கிடையாது, ஆனா சாகபயமாவும் இருந்துச்சு, சாவப்பாத்து அன்னிக்கு பயந்தேன், அந்தாளு கூட சாப்டது படுத்தது எந்திரிச்சது எல்லாம் சேந்து ஈரக்கொலைய அக்க....

வேண்டாமுன்னு நினைச்சிருந்த தண்ணிம்பாட்டில எடுத்து குடிச்சேன். போயிட்டு வாயா மகராசா, என்னைய தனியா விட்டுப் போயிட்டில்லன்னு குமட்டில குத்தி குத்தி அழுதே. படக்குன்னு வாரிச் சுருட்டிக்கிட்டு அய்யய்யோ நல்ல கதிக்கு போகணுமே இந்தாளுன்னு ராத்திரி முச்சூடும் பாத்து பாத்து எரிச்சேனய்யா...

விடியக்காலையில என்ன மறந்து அங்கனுக்குள்ளயே தூங்கிட்டுப் போயிட்டேன் கொழுந்தனும் அவரு மயங்களும் வந்து கூட்டிடுப் போனாக....

திக்பிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தேன். என்னா மனுஷிடா இவ? உடம்பிலும் சொல்லிலும், செயலிலும் பொன்னம்மாவின் உடம்பு மட்டும் அல்ல மனசும் ரொம்பவே தடித்திருந்தது எதனால் என்று புரிந்தது...

ரயில்தண்டவாளம் மாதிரி இருந்த ட்ரேயில் பாடியை வைத்தாள், பாத்துக்கப்பு உங்க மாமா மயன, காலையில எடுத்து வைக்கிறேன் வந்து கலயத்த வாங்கிட்டு காடாத்துங்க...
இருண்ட குகை மாதிரி இருந்த எரியூட்டும் பகுதியைப் பார்க்கவே படுபயங்கரமாய் இருந்தது. ட்ரேயை கை வைத்து தள்ளியவள் கொஞ்சம் தள்ளிவிடுப்பா என்றாள், தம் கட்டி தள்ளினேன் சர்ர்ர்ர்ர்ர் என்று உள்ளே போக ஒரு இரும்பு தடுப்பு வந்து விழுந்தது....
நீ கிளம்பு தம்பி....என்று எரிமேடைக்கு கீழே படியில் இறங்கி இருட்டிற்குள் போனவள்..
ஈஸ்வராஆஆஆ......என்றபடி அடுப்பை ஆன் செய்திருக்க வேண்டும்.....புஸ்ஸ்ஸ்ஸ் என்று சத்தம் கேட்டது.....

மயானத்தை விட்டு வெளியே வந்தேன்...ஊர் வழக்கம் போல ஓடிக் கொண்டிருந்தது.

ஈஸ்வரா......


-தேவா சுப்பையா...




.

Comments

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல